8-ம் வகுப்பு படித்தவர் அறுவை சிகிச்சை; உ.பி. தனியார் மருத்துவமனை மூடல்

0
0

உத்தரபிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் 8-ம் வகுப்பு படித்தவர் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு வழக்கு பதிவாகி உள்ளது.

திரைப்படங்களிலும் நடைபெறாத அளவிலான பயங்கர சம்பவமாக, உ.பி.யில் ஷாம்லி நகரின் ஆர்யன் என்ற தனியார் மருத்துவமனையில் 8-ம் வகுப்பு மட்டுமே படித்தவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும் காட்சி வாட்ஸ் அப்பில் வெளியானது.

இது தொடர்பான விரிவான செய்தி நேற்று ‘இந்து தமிழ்’ நாளேட்டிலும் வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஆர்யன் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளரான அர்ஜுன் நர்தேவ் மீது வழக்குப் பதிவாகி விசாரணை துவங்கி உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஷாம்லி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் தமிழருமான பி.தினேஷ்குமார் ஐபிஎஸ் கூறும்போது, ‘‘ஆர்யன் மருத்துவமனையின் உரிமையாளர்களான அர்ஜுன் நர்தேவ், ரூனா மற்றும் பொறுப்பு மருத்துவரான டாக்டர் ஷம்ஷாத் ஆகியோர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் பிறகு மூவரும் தலைமறைவாகி விட்டனர். அந்த வீடியோ காட்சியில் இருந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர் மற்றும் அவர் போல் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளையும் தேடி விசாரணை செய்து வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடத்தில் சுமார் 25 பேர் தவறான சிகிச்சையால் உயிர் இழந்தும் தமக்குள்ள அரசியல் செல்வாக்கால் நர்தேவ் தப்பி வந்தார். ஆனால், இந்தமுறை அவரது மருத்துவமனையின் செயல் வீடியோவாக வாட்ஸ்அப்பில் வெளியானதால். அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது.