‘8 தோட்டாக்கள்’ இயக்குநரின் அடுத்த படைப்பு… மதுரையில் ‘குருதி ஆட்டம்’ போடத் தயாராகும் அதர்வா! | Adharava’s next is Kuruthi aatam

0
0

சென்னை: இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு குருதி ஆட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தனது அடுத்தப் பட வேலைகளை ஆரம்பித்துள்ளார் இவர்.

இவரது புதிய படத்திற்கு குருதி ஆட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.

ராக் போர்ட் என்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.

குருதி ஆட்டம் படம் பற்றி இயக்குநர் ஸ்ரீ கணேஷ் கூறுகையில், “இந்த படம் முழுக்க, முழுக்க மதுரை மாநகரின் பின்னணியில் உருவாகும் படமாகும். கமர்சியல் மற்றும் திரில்லர் பின்னணியில் உருவாகும் படம் இது. ஒரு வெற்றி படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும்.

நாளுக்கு நாள் தன்னுடைய கதாநாயகன் அந்தஸ்த்தை உயர்த்தும் அதர்வா இந்த படத்தின் கதாநாயகன். அவருடைய முழு திறமைக்கும் தீனி போடும் படமாக “குருதி ஆட்டம்” அமையும். கதாநாயகி தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது. இந்த மாதத்தின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அதையடுத்து அவர் ஒத்தைக்கு ஒத்தை’, ‘பூமராங்’ ‘நூறு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.