66 ஆண்டுகளாக வளர்த்து வந்த 30 அடி நீளமான நகங்களை வெட்டிய இந்தியர்

0
0

நியூயார்க்

இந்தியர் ஒருவர் 66 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிக நீளமான தனது விரல் நகங்களை அமெரி்ககாவில் ஒரு அருங்காட்சியகம் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வெட்டினார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் சிலால். 82 வயதான இவர் இவர் கடந்த 1952 முதல் தனது இடது கை விரல் நகங்களை வெட்டவில்லை. இதனால் இவரது நகங்கள் மிக நீளமாக வளர்ந்தன. நகங்களின் ஒட்டுமொத்த நீளம் 909.6 செ.மீ. (30 அடி) அதிகபட்சமாக கட்டை விரல் நகத்தின் நீளம் மட்டும் 197.8 செ.மீ.

இதன்மூலம் 2016-ம் ஆண்டு உலகிலேயே மிக நீளமான நகங்களைக் கொண்டவர் என கின்னஸ் உலக சாதனை அமைப்பு இவரை அங்கீகரித்தது. இந்நிலையில், சிலால் 66 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இடது கை விரல் நகங்களை நேற்று வெட்டப்போவதாகவும் இதை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ‘ரிப்ளே’ஸ் பிலீவ் இட் ஆர் நாட்’ அருங்காட்சியகம் சார்பில் நகம் வெட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிலால் கலந்துகொண்டு தனது நகங்களை வெட்டினார். இந்த நகங்கள் ரிப்ளேஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.