2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக தகவல் தொழில்நுட்ப அணி வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: கட்சித் தலைவர் அமித் ஷா வலியுறுத்தல்

0
0

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறுவதை கட்சியின் ‘தகவல் தொழில்நுட்ப அணி உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது:

வருகிற மக்களவைத் தேர்தல், பாஜகவுக்கு சுலபமான தேர்தலாகவும் இருக்கப் போவதில்லை. ஏனெனில், நம் மீது வெறுப்புணர்வு கொண்டுள்ள எதிர்க்கட்சியினர், மக்களிடத்தில் பாஜக குறித்த பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. முழுக்க முழுக்க தகவல் தொழில்நுட்பமும், இணையமும் வளர்ச்சியடைந்த காலக்கட்டத்தில், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சியினரின் சதி வலைகளை தகர்த்தெறியும் போராளிகளாக நமது கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் செயல்பட வேண்டும்.

பாஜக மற்றும் பிரதமர் மோடி குறித்த பொய் செய்திகளை எதிர்க்கட்சிகள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாகவே நாம் பதிலடி கொடுக்க வேண்டும். இதற்காக, நமது தகவல் தொழில்நுட்ப அணியினர் ஓய்வின்றி கடுமையாக பணியாற்ற வேண்டும் என அமித்ஷா பேசினார்.