2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ ஆகிவிடும் சசிதரூர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

0
0

புதுடெல்லி

‘‘வரும் 2019 தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டை இந்து பாகிஸ்தானாக மாற்றி விடுவார்கள்’’ என்று சசிதரூர் எம்.பி. கூறியதற்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி எம்.பி.சசிதரூர். காங்கிரஸ் மூத்த தலைவரான இவர், திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்தால், நாட்டை இந்து பாகிஸ்தானாக மாற்றி விடுவார்கள். இந்து ராஜ்ஜியம் அமைப்பதுதான் அவர்கள் கொள்கை. அதைப் பிரதமர் மோடி இதுவரை மறுக்கவில்லை. ஜனநாயகத்தை தூக்கியெறிந்துவிடுவார்கள். அரசியல் சாசனத்தை மாற்றி விடுவார்கள். மக்களவையில் பாஜக பலத்துடன் உள்ளது. நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் உள்ளன. மாநிலங்களவையில் மட்டும்தான் பலமில்லை. 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுவிட்டால், சில ஆண்டுகளில் மாநிலங்களவையிலும் பலம் பெற்று விடும். இது நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தாகிவிடும். இவ்வாறு சசிதரூர் கூறினார்.

இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, ‘‘சசிதரூர் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும். பாகிஸ்தான் உருவானதே காங்கிரஸ் கட்சியால் தான். அதற்கு அந்தக் கட்சி பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவின், இந்தியாவில் உள்ள இந்துக்களின் புகழைக் கெடுக்க காங்கிரஸ் நினைக்கிறது’’ என்றார்.

இந்நிலையில், சசிதரூரைக் காங்கிரஸ் மேலிடம் எச்சரித்துள்ளது. பேசும்போது எல்லை மீறாமலும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஆனால், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க சசிதரூர் மறுத்துவிட்டார்.