2019 தேர்தலில் தொகுதி பங்கீட்டில் கருத்து வேறுபாடு இல்லை நிதிஷ் கட்சியுடனான கூட்டணி உடையாது: நேரில் சந்தித்த பிறகு பாஜக தலைவர் அமித் ஷா உறுதி

0
0

பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் கட்சியுடனான கூட்டணி உடையாது என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிஹாரில் பாஜக-நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஐஜத) கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐஜத வெளியேறியது. பின்னர் 2015-ல் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், ஐஜத ஆகிய கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. இதையடுத்து ஐஜத தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வரானார். ஆனால், கடந்த ஆண்டு மெகா கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ், மீண்டும் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், பிஹாரில் பாஜக-ஐஜத கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்த பிறகு பாஜக தலைவர் அமித் ஷா முதல்முறையாக நேற்று பாட்னா சென்றார். துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் விமான நிலையத்துக்கு சென்று அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் பாட்னாவில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் அமித் ஷாவும் முதல்வர் நிதிஷ் குமாரும் சந்தித்துப் பேசினர். இருவரும் ஒன்றாக காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, வரும் மக்களவைத் தேர்தல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளை அமித் ஷா சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒற்றுமையுடனும் வலுவாகவும் உள்ளது.

குறிப்பாக, பாஜக, நிதிஷ் குமார்கட்சி இடையிலான கூட்டணி உடையாது. கூட்டணி தொடரும். நாம் நிதிஷுடன் இணைந்து பணியாற்றுவோம். வரும் மக்களவைத் தேர்தலில் இங்கு உள்ள 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெறும். பிஹாரில் காங்கிரஸ் கட்சியை வேரறுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்றார்.

பின்னர் முதல்வர் நிதிஷ் குமார் தனது இல்லத்தில் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்து அளித்தார்.-