“2014-ம் ஆண்டில் சுஷ்மா சுவராஜ்தான் பிரதமராக இருந்திருக்க வேண்டும்”: ப.சிதம்பரம் திடீர் கருத்து

0
0

 

பாஜகவின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ்தான், 2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக வந்திருக்க வேண்டும். அவர்தான் இயற்கையாக அந்தப் பதவிக்கு வந்திருக்க வேண்டியவர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டு வரை மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக பாஜகவின் சார்பில் சுஷ்மா சுவராஜ்தான் இருந்துவந்தார். நாடாளுமன்ற ஜனநாயகப்படி, எதிர்க்கட்சி தேர்தலில் வெற்றி பெறுமபோது, அந்தக் கட்சியின் சார்பில் மக்களவைத் தலைவராக யார் இருந்தார்களோ அவரைப் பிரதமராக நியமிப்பதே நியாயமாகும்.

ஆனால், பாஜக கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவுடன், மிகச்சிறந்த சக்தி படைத்தவர், அரசியல் திறமை கொண்டவர் எனக்கூறி ஒருவரை “வெளியில்” இருந்து வந்து பிரதமராக(மோடி) பதவிஏற்றுவிட்டார் எனத் தெரிவித்தார்கள்.

பிரதமர் மோடியின் வருகையினாலும், எழுச்சியினாலும், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முக்கியத்துவம் இழந்துவிட்டனர். ஆனால்,தோல்வி அடையவில்லை.

சுஷ்மா சுவராஜை சிலர் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்கள் என்று புகார் வருகிறது. ஆனால், அது வேறுயாருமல்ல, பாஜகவின் சொந்த படைதான்அது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நாள்தோறும் செயல்பட்ட அந்த ட்விட்டர்படை சொந்த தலைவருக்கு எதிராகவே திரும்பிவிட்டது.

தேர்தலுக்குப் பின் சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். அந்தப் பதவியில் இப்போதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆனால் இதைக்கூட சில நேரங்களில் பிரதமர் அலுவலகம் ஆள்கிறது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது,சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிப்பது, பாஸ்போர்ட், விசா கோரி உதவி கேட்கும் இந்தியர்களுக்கு உதவுவது, இந்திய பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகளில் அனுமதி கேட்பவர்களுக்கு உதவுவது என சுஷ்மா தனது பணியை மிகவும் ‘ஸ்மார்ட்டாக’ செய்து வருகிறார்.

இதுபோன்ற சிறந்த தலைவர் நாட்டுக்கு அவசியம், அவரின் நல்ல குணங்களையும், அன்பையும் மக்கள் விரும்புகிறார்கள் மேலும், பெரும்பாலும் எதிர்க்கட்சிகளுடன் மோதல்போக்கு வராமல் சுஷ்மா தவிர்த்துவிடுவது அவருக்கு உதவுகிறது.

இவ்வாறு ப.சிதம்பரம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.