18,500 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்: துருக்கி அரசு அதிரடி முடிவு

0
0

துருக்கியில் ராணுவ புரட்சியில் பங்கு கொண்டதாக கூறி 18,500 அரசு ஊழிர்களை அந்நாட்டு அரசு பணி நீக்கம் செய்துள்ளது.

துருக்கியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ராணுவ புரட்சி நடந்தது. மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. ராணுவப் புரட்சியில் பங்கு கொண்டதாக கூறி அரசு ஊழியர்கள், காவல்துறையினர், ராணுவம், பல்கலைக்கழக ஆசிரியர்கள் என மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரை துருக்கி அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இவர்களில் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்கு நடந்து வருகிறது.

 

இந்நிலையில், 2016-ம் அண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய புகாரில் 18 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசு இன்று அறிவித்துள்ளது. அவர்களில் 8 ஆயிரத்து 998 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 6 ஆயிரத்து 152 ராணுவ அதிகாரிகள் ஆவர். இரண்டு ஆண்டுகளாக துருக்கியில் நெருக்கடி நிலை அமலில் உள்ள நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அரசு முடிவு செய்துள்ளது.

துருக்கியில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் எர்டோகன், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். முன்பு இருந்ததை விட அதிகப்படியான அதிகாரங்களை கொண்ட அதிபராக அவர் நாளை பதவியேற்க உள்ளார்.