13,700 சிலைகள் மாயம் என கூறுவது தவறு:  தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் மறுப்பு

0
1

தமிழகத்தில் 13,700 சிலைகள் மாய மானதாக கூறுவது தவறு, ஆவணங்கள் இல்லை என்பதுதான் சரி என,  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாகாணத்துக்கு  ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டதன்  பொன் விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி, கலைபண்பாடு மற்றும் விளையாட்டுத் துறைகளின் வாயிலாக,  திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு, கவிதை, கட்டுரை, பேச்சு  போட்டிகள் மற்றும் தமிழிசை வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனப் போட்டிகள்  மற்றும்   விளையாட்டுப் போட்டிகள்  நடத்தப்பட்டன.

அந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு, நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், அமைச்சர் க.பாண்டியராஜன்,  பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை   உதவி இயக்குநர் உமா, கலைபண்பாட்டுத் துறை மண்டல உதவி இயக்குநர் குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்  அருணா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு,  செய்தியாளர் களிடம் அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் உள்ள அனைத்து சிலைகளையும் ஆவணப்படுத்தும் பணி இந்திய தொல்லியல் துறையிடம் கடந்த 1998-ம்ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இதை யடுத்து,  48 ஆயிரம் சிலைகளை ஆவணப் படுத்தும் பணியில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டு வந்தது.  2013-ம் ஆண்டு, அப்பணி முடிந்து விட்டது. இந்நிலையில், 13 ஆயிரத்துக் கும் மேற்பட்ட சிலைகளுக்கு ஆவணங் கள் எங்களிடம் இல்லை என,  இந்திய தொல்லியல் துறை  தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழகத்தில் 13,700 சிலைகள் மாயம் என கூறுவது தவறு, ஆவணங்கள் இல்லை என்பதுதான் சரி.

தமிழக தொல்லியல் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, எவ்வளவு சிலைகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்

யார் தவறு செய்தாலும் விருப்பு வெறுப்பின்றி அதிமுக அரசு செயல்படும் என்பதற்கு சிலை கடத்தல் வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதான கைது  நடவடிக்கையே  உதாரணம்.

உலகத்தில் உள்ள முக்கிய அருங்காட்சியகங்களில் உள்ள சிலைகளை மீட்கவே சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இழந்த சிலைகளை,  சிபிஐயுடன் இணைந்து மீட்கும் நடவடிக்கையில் தமிழக தொல்லியல் துறை  செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.