11 பேர் தற்கொலை செய்த பகுதியில் வீடுகள், நிலத்தின் விலை சரிந்தது: ஆவி பயத்தில் அக்கம் பக்கத்தினர்

0
0

டெல்லி புராரி பகுதியில் 11 பேர் தற்கொலை செய்துகொண்ட வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் ஆவி பயத்தில் உள்ளனர். அந்தப் பகுதியில் வீடுகள் விற்பனையும் சரிந்துள்ளது.

டெல்லி புராரி பகுதியின் சந்த் நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஜூலை 1-ம் தேதி 11 பேர் தற்கொலை செய்து கொண்டனர். நேரடியாக சொர்க்கத்தை அடைவதற்காக பல ஆண்டுகளாக சடங்குகள் நடத்தி வந்து, பின்னர் அனைவரும் தற்கொலை செய்தது விசாரணையில் உறுதியானது.

இந்நிலையில், அந்த வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் ஆவி பயத்தில் உள்ளனர். தற்கொலை செய்த பாட்டியா குடும்பத்தினரின் வீட்டுக்கு பின்புறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பவன் குமார் தியாகி என்பவர், வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இவர் வீடு, மனை, நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எனக்கு மூடநம்பிக்கை எல்லாம் இல்லை. ஆனால், 11 பேர் தற்கொலை சம்பவத்துக்குப் பிறகு, கல்லூரியில் படிக்கும் என் மகள் பயத்தில் இருக்கிறாள். மேலும், என் வீட்டை சுத்தப்படுத்த நினைக்கிறேன். கெட்டது ஏதாவது இருந்தால், வீட்டை விட்டு வெளியேறிவிடும். மகளுக்கும் தைரியம் பிறக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பலரும் ஆவி பயத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் சந்த் நகர் பகுதியில் வீடு மற்றும் காலி மனைகளை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் கணிசமாக விலையும் சரிந்துள்ளது.

புராரி பகுதியில் வசிக்கும் பரத்வாஜ் என்பவர் கூறும்போது, ‘‘11 பேர் தற்கொலைக்குப் பிறகு பல்வேறு வதந்திகள் நிலவுகின்றன. அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். வாடகைக்கு குடியிருப்பவர்கள் வேறு இடங்களில் வீடு பார்க்க தொடங்கி விட்டனர். வீடு, நிலத்தின் விலைகளும் குறைந்துவிட்டன. ஆட்டோ, வாடகை கார்களும் இந்தப் பகுதிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்’’ என்றார்.