10 ரூபாய் நாணயம் செல்லாதா

0
20

சில இடங்களில் வியாபாரிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்துவிடுவதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் என்ன செய்வதே தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர். முன்பெல்லாம் நைந்துபோன நோட்டானாலும் சரி, கிழிந்து போன நோட்டாலும் சரிதைரியமாக கடைக்காரர்களிடம் மல்லுக்கட்டி முரண்டு பிடித்து செல்லுபடி ஆகும்படி செய்வோம். இல்லையானால், கிழிந்த, செல்லாத நோட்டுக்களையெல்லாம் மொத்தமாக வங்கிகளுக்கு போய் கொடுத்து எளிதாக மாற்றிக் கொள்வோம்.

ஆனால் எப்போது, மத்திய அரசு, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என தடாலடியாக அறிவித்ததோ அப்போதே மக்கள் வாயடைத்து போய்விட்டார்கள். பழைய போட்டுக்களை போன்று இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியுமா என தெரியவில்லை. இதுபோதாதென்று, 10 ரூபாய் நாணயங்களும் இனி செல்லாது என கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூட வாட்ஸ் -அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

அதனால், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து துறையிலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். அதுமட்டுமல்ல, புதுச்சேரி, வில்லியனூர் மேலண்டை வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட இந்தியன் வங்கிக் கிளையிலேயே 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப்பில் வைரலாகப் பரவியது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்றும், நாணயங்களை வாங்க மறுப்பது குற்றம் என்றும் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அறிவித்தது.

ஆனாலும் தற்போது, திண்டுக்கல் நகர் பகுதியில் மளிகை கடை முதல் டீ கடை வரை 10 ரூபாய் நாணயங்களை கடை உரிமையாளர்கள் வாங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். எதற்காக 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறீர்கள் என வியாபாரிகளை கேட்டால், “நாங்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க தயாராகத்தான் இருக்கிறோம், ஆனால் வங்கிகளில் இதை ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, நாங்கள் என்ன செய்வது? இதற்கு வங்கி நிர்வாகமும், மாவட்ட கலெக்டரும்தான் ஒரு முடிவு தர வேண்டும்” என்கின்றனர்.

ஏற்கனவே கலர் கலராய் ஜெராக்ஸ் போட்டு 2000 ரூபாய், 10 ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் வந்து பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது. அதனை நல்லா நோட்டா, கள்ள நோட்டா என அதை ஆராயவே மக்கள் மண்டையை உடைத்து கொண்டிருக்கிறார்கள். பின்பு கடைக்கார்களிடம் இந்த நோட்டுகளை நீட்டினால் ஒன்றுக்கு 10 முறை நோட்டையும் நம்மையும் மாறி மாறி பார்த்து வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

இதில் தற்போது 10 ரூபாய் நாணய பிரச்சனையும் சேர்ந்துள்ளது. பொதுமக்கள் வியாபாரிகளை குறை சொல்ல, வியாபாரிகளோ வங்கிகளை குறை சொல்ல.. இதற்கு முடிவுதான் என்ன என தெரியவில்லை. கருப்பு பண பிரச்சினையே நாட்டில் தீர்ந்தாலும் இந்த 10 ரூபாய் நாணய பிரச்சனை தீராது போலிருக்கு. வங்கி நிர்வாகமும், அரசாங்கமும்தான் ஒரு நல்ல தீர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும்.