ஹாலிவுட் ஜன்னல்: படமாகிறது.. ஒரு நடிகையின் கொலை! – சிறப்பு முன்னோட்டம்

0
1

 

ன கச்சிதமான திரைப்பட ஆக்கம், ஒவ்வொரு ஷாட்டிலும் மின்னும் துல்லியம், சுவாரசியமான நான் – லீனியர் கதையாடல் எனக் கறார் விமர்சகர்கள் முதல் சாமானிய ரசிகர்கள் வரை கொண்டாடப்படுபவர் ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் க்வான்டின் டொரன்டினோ. இவரது எழுத்து மற்றும் இயக்கத்தில் 2019, ஆகஸ்ட்டில் வெளியாக உள்ளது ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படம்.

டொரன்டினோவின் ஒன்பதாவது படம். அதில் நடிக்கும் லியனார்டோ டிகாப்ரியோ, பிராட் பிட் போன்ற உச்சநட்சத்திர ஒளிவட்டம் பொருந்திய நடிகர்களுக்கு அப்பால், திரைக்கதை அலசவிருக்கும் உண்மை சம்பவத்துக்காகவும் இந்தத் திரைப்படம் பேசுபொருளாகியிருக்கிறது.

ஒரு நள்ளிரவில்

1969-ல் ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கியின் மனைவியுமான ஷாரோன் டேட், ஒரு நள்ளிரவில் ஏராளமான கத்திக் குத்துகளுடன் படுகொலையானார். மர்ம நபர்கள் நடத்திய இந்த கொடூரச் சம்பவத்தில் ஷாரோன் வீட்டிலிருந்த மேலும் நால்வர் உடன் பலியானார்கள். வயிற்றிலிருந்த எட்டு மாத சிசுவுடன் ஷாரோன் பரிதாபமாக இறந்த சம்பவம் அமெரிக்காவையே உலுக்கிப்போட்டது. அடுத்த நாளும் இதே பாணியிலான இரு கொலைகள் நடந்தேறி அமெரிக்கர்களை அலறவைத்தன. பிற்பாடு இந்தக் கொலைகளை நிகழ்த்தியதாக 3 பெண்கள் உள்ளிட்ட கொலையாளிகள் கைதானார்கள். அவர்களுக்கு மூளையாகச் செயல்பட்ட சார்லஸ் மான்சன் என்ற சாமியாரும் கைதானார்.

சாமியாரின் சதிச் செயல்

சார்லஸ் மான்சன் தனது இருட்டு வாழ்க்கையைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தொடங்கியவன். ஆனால் இசை, பாடல், வசீகரப் பேச்சு எனச் சுற்றியிருப்பவர்களை வசியம் செய்வது அவனுக்குக் கைவந்த கலையாக இருந்தது. ஒரு கட்டத்தில் தன்னை ஏசுவின் சீடர் என அறிவித்துக்கொண்டான். ‘ஹிப்பி’ கலாச்சாரம், போதை வஸ்துக்கள், மயக்கும் இசை, கட்டற்ற பாலியல் என இளம் வயதினரை வளைத்தான். அமெரிக்காவில் இனப்போர் வருமென ஆரூடம் சொன்னதுடன், அதைத் தொடங்கிவைக்கும் பணி தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தன்னை நம்பியவர்களை மூளைச் சலவை செய்தான். இவனைப் பின்பற்றியவர்கள் ‘மான்சன் குடும்பத்தினர்’ என்று அழைக்கப்பட்டனர். ‘குடும்பத்தின்’ தீவிர உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்து அவன் அரங்கேற்றியதுதான், ஷாரோன் டேட் உள்ளிட்ட பல பிரபலங்கள் கொலையான படலம். இதன் உச்சமாய் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜெரால்ட் ஃபோர்டு மீது இவர்கள் படுகொலை முயற்சிகளை மேற்கொண்டதும் பின்னர் தெரியவந்தது.

‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தின் முதல் பார்வை

 

ஷாரோன் டேட் முதலான பிரபலங்களைக் கொல்ல சார்லஸ் மான்சன் திட்டமிட்டதன் பின்னணி விபரீதமானது. அமெரிக்க மண்ணில் கறுப்பு-வெள்ளை மக்களிடையே இனச் சண்டையை மூட்டிவிட, வெள்ளை இன பிரபலங்களைக் கொன்று அந்தப் பழியைக் கறுப்பினத்தவர் மீது சுமத்துவதே என்பதாகக் கூறியது ஷாரோன் டேட் கொலைவழக்கு விசாரணை. முதல் நாள் ஷாரோன் உள்ளிட்டோரைக் கொன்ற தன் சீடர்களை அழைத்த மான்சன், “ நீங்கள் நிகழ்த்திய கொடூரத்தின் வீரியம் போதாது” என்று கூறி அவர்களுடன் தானே முன்னின்று வேறு இரு படுகொலைகளைச் செய்துகாட்டி பயிற்சி அளித்தான் என்பதையும் அமெரிக்கப் போலீஸ் கண்டறிந்ததாகக் கூறப்பட்டது.

இந்த 7 கொலைகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக சார்லஸ் மான்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைந்தது. 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த சிறைவாசத்தில், தனது 83-வது வயதில் கடந்த நவம்பர் 19 அன்று சார்லஸ் மான்சன் இறந்தான்.

தனித்துவப் படைப்பு

மான்சனையும் அதிக அளவு இளம் பெண்களை அங்கத்தினர்களாகக் கொண்ட அவனது ‘குடும்பத்தினரையும்’ மையமாக வைத்து இதுவரை ஏராளமான ஆவணப் படங்கள், புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனபோதும் க்வான்டின் டொரான்டினோவின் தனித்துவப் பார்வையிலான படைப்புக்காக ரசிகர்கள் இப்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்யுமாறு ‘இரண்டாம் முறையாக ‘பல்ப் ஃபிக்சன்’ போன்றதொரு படத்தை இயக்குகிறேன்’ என குவான்டின் டொரான்டினோவும் எதிர்பார்ப்புத் திரியைத் தீவிரமாகப் பற்ற வைத்திருக்கிறார்.

60-களின் இறுதியில்

‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தின் கதை அறுபதுகளின் இறுதியில் நடக்கிறது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தபடி சினிமா வாய்ப்புக்கு ஏங்கி அதில் தோல்வியை எதிர்கொள்ளும் நடிகராக லியனார்டோ டிகாப்ரியோ வருகிறார். அவருடைய நண்பராகவும் சினிமா சாகச படப்பிடிப்புகளில் ‘டூப்’ போடுபவராகவும் பிராட் பிட் வருகிறார். இவர்கள் இருவரின் வாயிலாகத் தொடங்கும் கதை, அருகில் வசிக்கும் ஹாலிவுட் நடிகை ஷாரோன் டேட் மற்றும் அவரது படுகொலை பின்னணி திரைக்கதையாக விரிகிறது. ஷாரோன் பாத்திரத்தில் மார்கோ ராபி (Margot Robbie) நடிக்கிறார். இவர்களுடன் அல் பசினோ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஷாரோன் டேட் இறந்த 50-வது ஆண்டு நினைவாக அவர் கொல்லப்பட்ட ஆகஸ்ட் 9-ம் தேதியில் அடுத்த ஆண்டு படம் வெளியாக இருக்கிறது. லியனார்டோ, பிராட்பிட் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படம் என்பதுடன், க்வான்டின் படமாக்கும் முதல் உண்மைக் கதை என்ற சிறப்பும் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பார்ப்பில் கொஞ்சம் மசாலா சேர்ந்திருக்கிறது.