ஹாட்ரிக் மற்றும் 40 பந்துகளில் சதம்: ஆந்த்ரே ரசல் சாதனையில் தோல்வியின் பிடியிலிருந்து மீண்ட ஜமைக்கா வெற்றி

0
0

கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் ஆந்த்ரே ரசலின் 121 நாட் அவுட், மற்றும் ஹாட்ரிக் சாதனையினால் 225 ரன்கள் குவித்த ஜமைக்கா தலவாஸ் அணி ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி மன்ரோ, மெக்கல்லம், கிறிஸ் லின் அதிரடியில் 20 ஓவர்களில் 223 ரன்களுக்கு 6 விக்கெட் என்று அதிரடி ஸ்கோரை எட்டியது. இதில் ஜமைக்கா அணியின் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். மெக்கல்லம், டேரன் பிராவோ, ராம்தின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார் ஆந்த்ரே ரஸல்.

பிறகு இலக்கை விரட்டிய ஜமைக்கா அணி அலிகானின் 3 விக்கெட், காப்ரியேல், சார்லஸ் விக்கெட்டுகள் மூலம் 41/5 என்று தோல்வியின் பிடியில் இருந்தது, ஆனால் அதன் பிறகு ஆந்த்ரே ரஸல் 40 பந்துகளில் அதிரடி சதத்தையும் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் 13 சிக்சர்களுடன் 121 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாக இருக்க, கெனார் லூயிஸ் 35 பந்துகளில் 51 ரன்களையும் சேர்க்க 11 ஓவர்களில் 161 ரன்கள் கூட்டணி அமைக்கப்பட்டது. 18வது ஓவரில் லூயிஸ் ஆட்டமிழக்கும் போது 202/6 என்று இருந்த ஜமைக்கா பிறகு ஆந்த்ரே ரஸலின் உறுதியில் 19.3 ஓவர்களில் 225/6 என்று வெற்றி பெற்றது.

ஹாட்ரிக் சாதனை;ரஸலின் காட்டடி:

ஆந்த்ரே ரஸலுக்கு முதல் பந்திலேயே டீப் ஸ்கொயர் லெக்கில் அலிகான் கேட்சை விட்டார். அதன் பிறகு என்ன நடந்தது என்று உணர்வதற்குள் 40 பந்துகளில் சதம், கரீபியன் லீகில் அதிவேக சதம் இதுவே. 41/6 என்று ஆகியிருக்கும் ஜமைக்கா, அலிகான் அந்தக் கேட்சைப்பிடித்திருந்தால், ஆனால் அதுதான் விதிஎன்பது. கென்னார் லூயிஸ் 34 பந்துகளில் அரைசதம் எடுத்தா, ஆனால் இவர் சிங்கிள்களை எடுத்துக் கொடுத்ததால் ரஸல் ஸ்ட்ரைக்குக்கு வந்து வெளுத்துக் கட்ட முடிந்தது. 161 ரன்கள் 6வது விக்கெட் கூட்டணி டி20 உலகசாதனையாகும்.

தன் 12வது சிக்சரில் 40வது பந்தில் சதம் வந்தடைந்தார் ரஸல், 12 சிக்சர்கள் மூலம் கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ் சாதனையைச் சமன் செய்தார், அதன் பிறகு 13வது சிக்ஸர் அடித்து சாதனையை தன் வசம் கொண்டு வந்தார். சுனில் நரைனும் ரஸலின் அடிதடிக்குத் தப்பவில்லை 5 சிக்சர்களைக் கொடுத்து 3.3 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்தார்.

முன்னதாக ட்ரின்பாகோ அணி பேட் செய்த போது கடைசி ஓவரில் ஹாட்ரிக் சாதனை புரிந்தார் ரஸல்.

மெக்கல்லம் எழுச்சி:

 

மெக்கல்லம். | கெட்டி இமேஜஸ்.

 

டிரின்பாகோ ஆடும்போது அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம் முதல் 12 பந்துகளில் 7 என்று மந்தம் காட்டினர். அப்போது கிமார் ரோச் ஒரு புல்டாஸைப் போட அதனை தூக்கி அடித்து மெக்கல்லம் தன் ஷாட்களை ஆடத் துணிந்தார். அடுத்த 12 பந்துகளில் 43 ரன்களை விளாசி 24 பந்துகளில் அரைசதம் கண்டு 5 பவுண்டரிக்ள் 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ரஸல் பந்தில் ஹாட்ரிக்கின் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார், ஆனால் கிமார் ரோச்சின் ஒரே ஓவரில் 30 ரன்களைக் குவித்தார் மெக்கல்லம். இதில் ஒரு நோ-பால் சிக்சரும் அடங்கும். ரஸல் பந்தை லாங் ஆனில் தூக்கி அடித்துக் கேட்ச் ஆக அடுத்த பந்து டேரன் பிராவோ (29) வைடு யார்க்கரை இழுத்து உள்ளே விட்டுக் கொண்டார். தினேஷ் ராம்தின் ஸ்லோ பவுன்சரை கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரஸல் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

ஆட்ட நாயகனாக ஆந்த்ரே ரஸல் தேர்வு செய்யப்பட்டார்.