ஹரியாணா மாநிலத்தில் தோழியை பலாத்காரம் செய்ததாக மகள் அளித்த புகாரின்பேரில் தந்தை கைது

0
0

தோழியை பலாத்காரம் செய்ததாக மகள் அளித்த புகாரின்படி, அவரது தந்தையைப் போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், 2-ம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் இருந்தே நெருங்கிய தோழி ஒருவர் உள்ளார். அவருடைய தந்தை தொழிலதிபர். செயற்கை பற்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு சோனா சாலை மற்றும் கனடாவில் அலுவலகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மிகவும் நம்பிக்கையான குடும்பம் என்பதால், குருகிராமின் பெலேர் பகுதியில் உள்ள தோழியின் வீட்டில் பல நாட்கள் மாணவி தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சட்டக் கல்லூரி மாணவியை தொழிலதிபர் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியும், அவரது தாயும், தொழிலதிபரின் மகளும் போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறியிருப்பதாவது:

என் தோழியின் தந்தையை, என் தந்தை போல் நினைத்தேன். அங்கிள் என்றுதான் அழைப்பேன். கடந்த வியாழக்கிழமை என்னையும், என் தோழியையும் இரவு உணவுக்கு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு கட்டாயப்படுத்தி இருவரையும் மது அருந்த செய்தார். அதன்பின் வீட்டுக்கு சென்றோம். நானும் என் தோழியும் ஒரு அறையில் தூங்கினோம்.

அதிகாலை 4 மணிக்கு மேல், என் தோழியின் தந்தை எங்கள் அறைக்கு வந்தார். என்னை எழுப்பினார். என் கையைப் பிடித்து அவரது அறைக்கு இழுத்துச் சென்றார். கதவை உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டுவிட்டு என்னை பலாத்காரம் செய்து விட்டார். அவர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்.

அதன்பின், நான் தோழியின் அறைக்குத் திரும்பி அவரை எழுப்பி நடந்த விஷயத்தை கூறினேன். அவரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகில் உள்ள என் வீட்டுக்கு தோழியே அழைத்துச் சென்றார். அங்கு என் தாயிடம் நடந்த விவரங்களை கூறினோம். மூவரும் சேர்ந்து குருகிராம் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளித்தோம்.

இவ்வாறு மாணவி கூறியுள் ளார்.

ஆனால் மாணவியின் புகாரை தொழிலதிபர் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘மாணவிதான் அதிகாலை என் அறைக்கு வந்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘புகார் அளிக்கும் போது, பாதிக்கப்பட்ட பெண், அவருடைய தாயுடன் குற்றம் சாட்டப்பட்டவரின் மகளும் உடன் இருந்தார். தனது தந்தை கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்’’ என்றனர்.

புகாரின்பேரில் போலீஸார் தொழிலதிபரை வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வெளியூர் சென்றிருந்த தொழிலதிபரின் மனைவி தொலைபேசியில் கூறும்போது, ‘‘நடந்த விஷயங்களை என் மகள் கூறியதை கேட்டு அதிர்ந்து விட்டேன். குடும்ப கவுரவமே சிதைந்துவிட்டது’’ என்றார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ராஜஸ்தானைச் சேர்ந்தவர். அவரும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கூறும்போது, ‘‘என் மகளை சீரழித்தவருக்கு அதிகப்பட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய சிறந்த வழக்கறிஞரை ஏற்பாடு செய்வேன். என்னுடைய மனநிலையை கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. என் மகளுக்கு விரைவில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.