ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராமானுஜ மடத்தின் 50-வது பட்டம்; ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகளின் உடல் நல்லடக்கம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி

0
0

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராமானுஜ மடத்தின் 50-வது பட்டம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், ஆச்சார்யன் திருவடி அடைந்ததையொட்டி கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில் உள்ள உடையவர் தோப்பில் ஆளவந்தார் படித்துறை அருகே திருப்பள்ளிப்படுத்துதல் (நல்லடக்கம்) நேற்று நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் நயினார் பாளையம் என்ற கிராமத்தில் வைதீக குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் வரதாச்சாரியார். திருவானைக்காவல் சங்கர மடத்தில் ரிக் வேதம், சிதம்பரத்தில் சமஸ்கிருதம் பயின்று அவற்றில் தேர்ச்சி பெற்றவர்.

தமது நெடுநாளைய விருப்பப்படி, 60-வது வயது நிறைவடைந்தபோது ஸ்ரீரங்கத்துக்கு வந்து உடையவர் சன்னதியில் காஷாயம் ஏற்று, ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்ற பட்டத்துடன் ஸ்ரீரங்கம் ராமானுஜ மடத்தின் 50-வது ஜீயராக திருமடத்தை அலங்கரித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜீயர் சுவாமிகள் திருச்சியில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் ஆச்சார்யன் திருவடியை அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவரது உடல் ஸ்ரீரங்கம் வடக்கு உத்திர வீதியில் உள்ள திருமடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, நேற்று காலை அவரது உடலுக்கு பஞ்சாம்ருத திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, உத்திர வீதிகளில் பிரம்மரத பல்லக்கு மரியாதை ஊர்வலம் நடைபெற்று, அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் சேவைக்காக பிற்பகல் வரை வைக்கப்பட்டிருந்தது.

அனைத்து சடங்குகளும் முடிந்த பிறகு, ஜீயரின் உடல் கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில் உள்ள உடையவர் தோப்புக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சில சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து, அவரது உடல் அமர்ந்த நிலையில் பெரிய மூங்கில் கூடையில் வைக்கப்பட்டு திருப்பள்ளிப்படுத்துதல் (நல்லடக்கம்) செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், தமிழக அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசன், கோயில் செயல் அலுவலரும், அறநிலையத் துறை இணை ஆணையருமான பொன்.ஜெயராமன், தமிழக முன்னாள் அரசு கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.