ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராமானுஜ மடத்தின் 50-வது பட்டம்: ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் ஆச்சார்யன் திருவடி அடைந்தார்

0
0

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ராமானுஜ மடத்தின் 50-வது பட்டம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஆச்சார்யன் திருவடியை அடைந்தார்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் நயினார் பாளையம் என்ற கிராமத்தில் வைதீக குடும்பத்தில் பால கிருஷ்ணமாச்சாரி – சேஷலட்சுமி தம்பதியருக்கு 3.12.1929-ம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் வரதாச்சாரியார். திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் ரிக் வேதம், சிதம்பரத்தில் சமஸ்கிருதம் பயின்று அவற்றில் தேர்ச்சி பெற்றவர். வேதம் பயிலும் காலத்திலேயே திருவரங்கனை சேவித்து அரங்கன் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டார். 1959-ம் ஆண்டு முதல் சில ஆண்டுகள் கோவை ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றினார். தனது 60-வது வயது நிறைவடைந்த உடன் தனது நெடுநாள் விருப்பப்படி ஸ்ரீரங்கம் வந்து உடையவர் சன்னதியில் காஷாயம் ஏற்று, ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்ற பட்டத்தை ஏற்று ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50-வது ஜீயராக திருமடத்தை அலங்கரித்து வந்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீநம்பெருமாள் கைங்கர்யத்தில் தன்னை பூரணமாக ஆட்படுத்திக் கொண்ட ஜீயர் சுவாமிகள், கோயிலில் ரங்கநாதர் சேவையில் புனுகுகாப்பு சாற்றும்போது திருவாலவட்டம் (விசிறி வீசுதல்) கைங்கர்யம், திருவாராதனம், கோஷ்டிகள் கைங்கர்யம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆற்றி வந்தார்.

ஸ்ரீராமானுஜரின் எண்ணப்படி மடத்தை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். மடத்துக்கு வரும் அடியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியும், அரங்கனின் சேவைகளில் அடியார்களை ஈடுபடுத்தியும், அனைவரின் அன்புக்கும், பக்திக்கும் உரியவராக வைணவத்துக்கு பெருந்தொண்டு ஆற்றியவர். கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஆச்சார்யன் திருவடியை அடைந்தார். ஸ்ரீரங்கம் வடக்கு உத்திரவீதியில் உள்ள ராமானுஜர் மடத்தில் இன்று (ஜூலை 12) காலை 11 மணிக்கு சம்பிரதாய சடங்குகள் நடைபெற்று, பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்கம் நடைபெறவுள்ளது.