ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவுக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

0
0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கடந்த மே 22-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த பேரணியின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த 3-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுச்சூழல் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் புகை, கழிவுகளால் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆலை மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.

தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு தேசிய பசுமைத் தீர்ப்பாய தற்காலிக தலைவர் நீதிபதி ஜவாத் ரஹீம் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வேதாந்தா குழுமம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் வாதாடினார். அவர் கூறியபோது, “முன்அறிவிப்பு இன்றி ஆலையை மூடிவிட்டனர். தமிழக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், வைத்தியநாதன், ராகேஷ் திரிவேதி கூறியபோது, “மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்திய பிறகே ஆலை மூடப்பட்டது” என்று வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜவாத் ரஹீம், வேதாந்தா குழும மனு குறித்து தமிழக அரசும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் வரும் 18-ம் தேதிக்குள் தங்கள் பதிலை தீர்ப்பாயத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.