வைகை நதி சீரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட ரூ.120 கோடி நிதி எங்கே? – பணிகள் தாமதமாவதால் மக்கள் கேள்வி

0
0

மதுரை வைகை ஆற்றை சீரமைக்க மத்திய அரசு ரூ.120 கோடி ஒதுக்கிய நிலையில் இன்னும் அதற்கான பணிகள் தொடங்காததால் ஒதுக்கிய நிதி எங்கே என்று மக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

கடந்த கால்நூற்றாண்டுக்கு முன் வரை ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவ நதியாக வைகை ஆறு பெருக்கெடுத்து ஓடி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை வளமாக்கியது. ராமநாதபுரம் மாவட்டம் கடைமடை விவசாயிகள் வரை 5 மாவட்டங்களிலும் அமோகமாக விவசாயம் செய்தனர்.

தற்போது வைகை அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டால் அது சிவகங்கை எல்லையை தாண்டுவதே அபூர்வமாக இருக்கிறது. அந்தளவுக்கு வைகை ஆற்றில் நீரோட்டப்பாதைகளில் மணல் கொள்ளையால் பாதாள குழிகள் காணப்படுகின்றன. ஆற்றுப்படுகைகள் வறண்டு தண்ணீர் வந்தால் அதை காய்ந்துப்போன மண் உறிஞ்சிவிடுகிறது. ஆற்றங்கரையோரங்களில் பெரும் விவசாயிகள், தனியார் நிறுவனங்கள் குழாய்களை இறக்கி தண்ணீரை உறிஞ்சுவார்கள். அதனால், வைகை அணை தண்ணீர் ராமநாதபுரம் கடை மடை விவசாயிகளுக்கு இன்று எட்டாக்கணியாகிவிட்டது.

வைகை ஆற்றில் தண்ணீர் வராதது ஒரு பக்கம் இருந்தாலும் வைகை ஆற்றின் சூழல், சுகாதாரம் தற்போது முற்றிலும் கெட்டுப்போய் விட்டது. வட மாநிலங்களில் காணப்படும் கங்கை நதி மாசு அடைந்தால் அதை பராமரிக்கவும், சீரமைக்கவும் பெரியளவில் தேசிய கவனத்தைப்பெறுகிறது. ஆனால், ஒரு காலத்தில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் பாசனம் பெற்ற வைகை ஆற்றில் 58 இடங்களில் கழிவு நீர் கலந்தும், தூர்நாற்றம் வீசியும் அரசு கவனத்தை ஈர்க்க முடியவில்லை. குறிப்பாக மதுரை மாநகரில் 12 கி.மீ., தூரம் பயணிக்கும் வைகை ஆறு அதிகளவு மாசுடைந்துள்ளது.

போதிய நிதி ஆதாரமில்லாமல் வைகை ஆறு சீரமைக்கப்படாமல் இருந்தது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர் போராட்டத்தால் வைகை ஆற்றை சீரமைக்க மத்திய அரசு ரூ.120 கோடி ஒதுக்கியது. ஆனால், இந்த நிதி எங்கே யாரிடம் இருக்கிறது, பணிகள் ஏன் தொடங்கவில்லை என்பது தெரியவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்கியும், அந்த நிதியை கொண்டு அறிவிக்கப்பட்ட வைகை ஆற்றை சீரமைக்கும் திட்டமும் முடங்கிப்போய் உள்ளதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து வைகை நிதி மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் கூறுகையில், “கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து வைகை ஆற்றை சீரமைக்க ரூ.120 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக கடிதம் வெளியிடப்பட்டது. அதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்தை அணுகி கேட்டபோது ஸ்மார்ட் சிட்டி தவிர எந்த ஒரு நிதியும் வரவில்லை என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

கடந்த மே மாதத்தில் மத்திய நதிகள் மேம்பாட்டு அமைச்சகத்தில் தகவல் உரிமை அறியும் சட்டத்தில் வைகை ஆற்றை பராமரிக்க ஒதுக்கப்பட்ட நிதியின் அளவினை குறிப்பிட்டு கேட்டபோது, வைகை ஆற்றை பராமரிக்க ரூ.120 கோடியில் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்று தகவல் வந்தது. அதற்கான ரூ.63.34 கோடியினை சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பியதாக தகவல் கிடைத்தது.

இந்த ரூ.63.34 கோடி எந்ததெந்த தேதியில் சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்தது என்ற தகவலை ஆர்டிஐ மூலம் தேதி வாரியாக பெற்றோம். இந்த நிதியினால் நடைபெற்ற பணிகளின் பட்டியலை கேட்டபோது அதில் ஒரு ரூபாய் கூட வைகை ஆறு சீரமைக்கப்படவில்லை என்ற தகவல் வந்தது. சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு வாரியத்திடம் கேட்டால் வைகைக்காக எந்த செலவும் செய்யவில்லை என்ற தகவல் வருகிறது.

மத்திய அரசு நிதி அனுப்பிவிட்டோம் என்றும், சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு வாரியம் வைகை பராமரிப்பு ஒரு ரூபாய் கூட இதுவரை செலவு செய்யவில்லை என்றும் தகவல் வந்தது. மத்திய அரசும் கொடுத்த நிதியை கண்டுகொள்ளாமல் இருப்பதும், மாநில அரசு அந்த நிதியை கொண்டு வைகை ஆற்றை சீரமைக்க ஆர்வம் காட்டாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது” என்றார்.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “வைகை ஆறுக்காக ஒதுக்கியப் பணத்தை மாற்றுத்திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது. அதற்கான டெண்டர் இன்னும் விடப்படவில்லை. வங்கி கடன் கிடைப்பது உறுதியாகிவிட்டது. இம்மாத இறுதியில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்” என்றார்.