வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தில் 500 மீட்டர் தூர இணைப்பு பணி 8 ஆண்டாக தாமதம்: விரைவில் நல்ல தீர்வு என தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ நம்பிக்கை

0
0

சென்னை வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப் பணிகளில் வெறும் 500 மீட்டர் தூரத்துக்கான பணிகள் மட்டும் முடியாமல் கடந்த 8 ஆண்டுகளாக பாதியில் நிற்கிறது. புறநகர் மின்சா ரயில் சேவை, மெட்ரோ ரயில் உள்ளிட்ட ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை மக்கள் எளிதில் பெற, இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதல்கட்டமாக சென்னை கடற்கரை – மயிலாப்பூர் இடையே 9 கி.மீ தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப் பணிகள் நடந்தன. 2-வது கட்டமாக மயிலாப்பூர் – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.877.59 கோடி செலவில் 2007-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. தற்போது, கடற்கரை – வேளச்சேரி இடையே தினமும் 150 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையில், வேளச்சேரி – பரங்கிமலையை இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப் பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிப்பதால், தாமதம் ஏற்பட்டது.

இந்த சூழலில், நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சினை தீர்ந்துவிட்டதாக தெற்கு ரயில்வே சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து. ஆனால், இன்னும் அந்தப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியபோது, ‘‘போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் ரயில் போக்குவரத்து சேவை மிக முக்கியமானதாக உள்ளது. ஆனால், வேளச்சேரி – பரங்கிமலையை இணைக்கும் பணிகளில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்தப் பணிகளை முடித்தால் மக்கள் பல்வேறு இடங்களுக்கு விரைவாகவும், குறைந்த கட்டணத்திலும் பயணம் செய்ய முடியும். பெரும்பான்மையான மக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை விரைந்து முடிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து கேட்டபோது, முன்னாள் அமைச்சரும், ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான தா.மோ.அன்பரசன் கூறியதாவது:

வேளச்சேரி – பரங்கிமலை இடையே வெறும் 500 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பணிகள் பாக்கி உள்ளன. இந்தப் பணிகள் கடந்த 8 ஆண்டுகளாக தடைபட்டு பாதியில் நிற்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றினால், பறக்கும் ரயில், புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில், பேருந்து, விமான நிலையம் என ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை மக்கள் பெற முடியும். பிராட்வே, தாம்பரம், சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மக்கள் விரைந்து செல்ல முடியும்.

எனவே, இத்திட்டத்தை விரைந்து முடிக்குமாறு சட்டப்பேரவையில் வலியுறுத்திப் பேசியுள்ளேன். இத்திட்டத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதில் பிரச்சினை இருந்ததாகவும், விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு, மக்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரைந்து முடிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.