வேலைவாய்ப்பா.. எங்கே இருக்கிறது?- இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சால் சர்ச்சை

0
1

வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு மகாராஷ்டிராவில் மராத்தா மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது, வேலைவாய்ப்புக்கு எங்கே செல்வது என்று பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிராவில் அரசியல்ரீதியாகவும், மக்கள்தொகையிலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் மராட்டிய சமூகத்தினர், தங்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்பையின் பல்வேறு இடங்களில் கடந்த ஒருவாரத்தில் பஸ்களுக்கு தீவைப்பு, கல்வீச்சு, கடையடைப்பு போராட்டம் போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதனால், நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், அவுரங்காபாத் மாவட்டத்துக்கு வந்திருந்த மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம் மராட்டிய மக்களின் இடஒதுக்கீடு போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவர் கூறியதாவது:

மாரட்டிய மக்கள் கேட்பதுபோல் இடஒதுக்கீட்டை கொடுத்து விடுகிறோம் எனவைத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு யார் கொடுப்பது?. வேலைவாய்ப்புக்கு எங்கே செல்வது.

வங்கித்துறையை எடுத்துக்கொண்டால், வேலைவாய்ப்பு சுருங்கிக்கொண்டே வருகிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால், மனிதர்களுக்கு வேலைக்கு இடமில்லை. அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, இளைஞர்களுக்கு எங்கே இருக்கிறது வேலை?

மக்களும் அரசியல் நலனுக்காகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று கூறுகிறார்கள். ஒவ்வொருவரும் இதேபோன்ற கருத்தைக் கூறுகிறார்கள். பீகார், உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் வலுவாக இருக்கிறார்கள். அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களும் தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள்.

ஒரு சிலரின் சிந்தனைப்படி ஏழைகள் ஏழைகள்தான். அவர்களுக்குள் மதம், மொழி, கிறிஸ்தவர்,இந்து, மராட்டியர் என்ற பாகுபாடு இல்லை. அதிலும் சிலருக்கு உடுத்த உடையில்லை, உண்ண உணவில்லை என்றும் கூறுகிறார்கள். மற்றொரு பிரிவினரோ ஒவ்வொரு சமூகத்திலும், மதத்திலும் இருக்கும் ஏழைகளைக் காப்பாற்ற வேண்டும், அவர்களை உயர்த்திவிட வேண்டும் என்கிறார்கள். இந்த விஷயத்தை அரசியலாக்காதீர்கள்.

அரசியல் நலனுக்காக, நோக்கத்துக்காகவே இடஒதுக்கீடு என்ற விஷயம் முன்வைக்கப்படுகிறது. சமூக பொருளாதார சிந்தனையையும், பொருளாதாரத்தையும், அரசியலையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. அனைத்தையும் கண்டிப்பாக அரசியலாக்காதீர்கள்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இடஒதுக்கீடு விவகாரத்தைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி எடுத்துவருகிறார். ஆதலால் மக்கள் அமைதிகாக்க வேண்டும். பொறுப்புள்ள இடத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் எரிகிற தீயில் நெய் வார்க்கும் வேலையில் ஈடுபடக்கூடாது

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

பிரட்இளைஞர்கள் கோடிக்கணக்கில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் போதும், மகாராஷ்டிராவில் வேலைவாய்ப்புக்காக இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் நிலையில், மத்திய அமைச்சர் ஒருவர் வேலைவாய்ப்பு எங்கே இருக்கிறது என்று பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் பிரதமர் மோடி நாடெங்கும் பிரச்சாரம் செய்யும் போது நடப்பு அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது, என்று முந்தைய அரசுகளை ஒப்பிட்டு தன் அரசு ‘அச்சே தின்’ என்றெல்லாம் பேசி வரும் நிலையில் அவரது அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் வேலைவாய்ப்பு எங்கு இருக்கிறது என்று பேசியிருப்பது முரணாகத் தொனிக்கிறது என்று அரசியல் வட்டாரங்களில் சலசலக்கின்றனர்.