வேணு சீனிவாசன் மீதான வழக்கை அரசு திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்

0
0

டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் மீதான வழக்கை அரசு திரும்பப் பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தனியார் நிறுவனங்களில் ஓர் முன்மாதிரி நிறுவனமாக விளங்கி வருகின்ற டிவிஎஸ் நிறுவனத்தின் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் மீது, கோயில் சிலை கடத்தல் வழக்குப் பதிவு செய்திருப்பது வியப்பாக உள்ளது.

மையிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருப்பணிக்கு ரூ.70 லட்சம் வழங்கியுள்ளார். திருவரங்கம் கோயில் அறக்கட்டளைத் தலைவராகவும் உள்ளதுடன் அக்கோயில் கும்பாபிஷேகப் பணிகளுக்கு ரூ.25 கோடி நிதியும் வழங்கியுள்ளார். மேலும் பல கோயில்களுக்கு நிதி வழங்கியதுடன், பல்வேறு பொதுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டுள்ளார். அவ்வாறு இருக்க அவரை கோயில் சிலை மாயமான வழக்கில் சேர்த்திருப்பது உள்நோக்கமுடையதாகத் தெரிகின்றது. யாருடைய தூண்டுதல் பேரில் இவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும்.

வேணு சீனிவாசன் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறுவதுடன் சிலைகள் கடத்தல் வழக்குகளில் அப்பாவிகள், அதிகாரிகள் மீது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வழக்குகள் பதிவு செய்திருந்தால் அவற்றை திரும்பப் பெறப்படுவதுடன் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.