வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் பினராயி விஜயன்

0
0

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அமைச்சர்களுடன் ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்திருந்த தென்மேற்குப் பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் அதன் துணை அணையான செருதோணி அணையில் உள்ள 5 மதகுகளில் 3-வது மதகில் மட்டும் வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மீதமுள்ள 4 மதகுகளும் சனிக்கிழமை திறக்கப்பட்டன. 40 ஆண்டுகளுக்குப் பிறகு அணையின் 5 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் செருதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்று தங்கும்படி போலீஸார் அறிவுறுத்தி வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மூணாறை அடுத்த பள்ளிவாசல் என்ற மலைப்பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. பலத்த மழையால் இந்த விடுதியின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த விடுதிக்குச் செல்லும் பாதை மண்ணால் மூடியது. அங்கு தங்கி இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 61 பேர் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர்.

இதையடுத்து மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தற்போது செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேரள சுற்றுலாத் துறை அறிவுறுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் 200 பேர் இன்று (சனிக்கிழமை) இடுக்கி வர உள்ளனர். அவர்களை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை சிறிய அளவில் தற்காலிக பாலங்களைக் கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். கொச்சி சர்வதேச விமான நிலையப் பகுதியில் தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் இல்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அங்கு விமான சேவை மீண்டும் தொடங்கியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ராணுவ ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பினராயி விஜயன்.

 

கேரளாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். மேலும் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். வயநாடு மாவட்டத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.