வெனிசுலா அதிபர் மீது கொலை முயற்சி: 6 பேர் கைது

0
0

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை ஆளில்லா விமானம் மூலம் கொல்ல முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெனிசுலாவின் கார்காஸ் நகரில் ராணுவம், தேசியப்படைகளின் 81-வது ஆண்டு விழா நடந்தது. அப்போது, ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு படையினரின் அணிவகுப்பு நடந்தது. அதன்பின், அதிபர் நிகோலஸ் மதுரோ நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென வானில் இருந்து சிறிய ரக ஆளில்லா குட்டி விமானம் பறந்து வந்து திடீரென வெடித்துச் சிதறியது. உடனடியாக பாதுகாவலர்கள் நிக்கோலஸ் மதுரோவை சுற்றிக்கொண்டு காத்தனர். இந்தத் தாக்குதலிலிருந்து நிக்கோலஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 7 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில் மதுரோவைக் கொல்ல முயற்சி செய்ததாக சந்தேகத்தின் பெயரில்  6 பேரை வெனிசுலா அரசு கைது செய்துள்ளது.

இதுகுறித்து வெனிசுலா உள்துறை அமைச்சர் நெஸ்டர் ரிவிரோல் கூறும்போது, “மதுரோவைக் கொல்ல முயற்சித்ததாக சந்தேகத்தின் பெயரில் 6 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தீவிரவாதத் தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்” என்றார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ இந்தக் கொலை முயற்சி தாக்குலுக்கு கொலம்பியா நாடும், அமெரிக்காவும் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளம் மிக்கது. அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின் நிகோலஸ் மதுரோ  இரண்டாவது முறையாக அதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.