வெங்கட் பிரபு-சிம்பு கூட்டணி படத்தின் பெயர் அறிவிப்பு நாளை வெளியாகிறது! | STR, Venkat Prabhu movie title to be released tomorrow

0
0

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பெயர் நாளை அறிவிக்கப்படும் என வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் நீண்டகால விருப்பமான வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணி இப்போது சாத்தியமாகியுள்ளது. பில்லா படத்தை சிம்புவை வைத்து ரீமேக் செய்யப்போகிறார் என பேசப்பட்டது. குஷியான ரசிகர்கள் அது நிச்சயம் பில்லா 3 தான் என வரிந்துகட்டிக் கொண்டு இறங்கினர். ஒரு தெலுங்கு பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எடிட் செய்து சிம்புவை வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உருவாக்கி ஷேர் செய்தனர்.

இந்த நிலையில், சிம்புவுக்கென புதிய ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளதாக வெங்கட்பிரபு அறிவித்தார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் சண்டக்கோழி 2 , சாமி 2, விஜய்யுடன் சர்க்கார் என்று படு பிசியாக இருக்கிறார். சிம்பு மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானத்திற்காக காத்திருக்கும் அதே நேரத்தில், பார்ட்டி படம் ரிலீசாகி பார்ட்டி பண்ண பிறகுதான் இந்த பட வேலைகளை வெங்கட்பிரபு ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது.

இந்த திரைப்படத்திற்கு “அதிரடி” என்று பெயரிடப்போகிறார்கள் என செய்திகள் பரவி வரும் நிலையில் படத்தின் தலைப்பு குறித்து நாளை காலை 11 மணிக்கு அறிவிப்பேன் என வெங்கட்பிரபு ட்வீட் செய்துள்ளார்.

இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராமை ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார் என்றும் தகவல்கள் பரவிவருகின்றன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.