வீராணத்தில் இருந்து தினமும் சென்னைக்கு 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு: குடிநீர் வாரியம் நடவடிக்கை

0
0

வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால், சென்னை குடிநீருக்காக தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காவிரியில் அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி வீராணம் ஏரிக்கு 416 மில்லியன் கனஅடி காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை குறைபாடு காரணமாகவும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாலும் சென்னை மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை உள்ளது. சென்னையில் தற்போது தினமும் 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதே அளவு தண்ணீரை விநியோகம் செய்வதற்காக வீராணம் ஏரியில் இருந்து தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீரை குழாய் மூலம் சென்னைக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

சுத்தம் செய்யும் பணி

அதற்காக குடிநீர் அனுப்பப்படும் குழாய்களை சுத்தம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. குறிப்பாக சேத்தியாதோப் பில் இருந்து வடக்குத்து கிராமத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வரையிலான குழாய்கள் சுத்தம் செய்யும் பணியை வீராணம் ஏரி நீரேற்று நிலையத்தில் இருந்து சென்னைக் குடிநீர் வாரிய செயல் இயக்குநர் டி.பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். இப்பணி மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவடையும். அதன்பிறகு சென்னை குடிநீர் தேவைக்காக வீராணம்

ஏரியில் இருந்து சென்னைக்கு தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் குழாய் மூலம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.