வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்: துணை முதல்வர், தலைவர்கள் மரியாதை

0
0

வீரன் அழகுமுத்துக்கோனின் 260-வது பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

காட்டாலங்குளம் சீமையின் மன்னராக இருந்தவர் வீரன் அழகுமுத்துக்கோன். ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்து வீரமரணம் எய்திய இவரது 260-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர்கள் ராஜகண்ணப்பன், எஸ்.கோகுல இந்திரா, பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, எம்எல்ஏக்கள் சேகர்பாபு, பெரியகருப்பன் உள்ளிட்டோரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் தாமோதரன், எம்எல்ஏ ஹெச். வசந்தகுமார், நாசே ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், பாஜக சார்பில் மூத்த தலைவர் இல. கணேசன் எம்.பி., மதிமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் நிர்வாகிகளும், தமாகா சார்பில் துணைத் தலைவர் கோவை தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

யாதவர் பேரவை நிறுவனர் காந்தையா, யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன், அகில இந்திய யாதவ மகாசபை தலைவர் ராதாகிருஷ்ணன், கோகுல மக்கள் கட்சித் தலைவர் எம்.வி.சேகர், யாதவர் பேரவை தலைவர் ஜி.கண்ணன் உள்ளிட்டோர், ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் இருந்து பேரணியாக சென்று, அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர்.