வீடு புகுந்து பெண்களைத் தாக்கியதாக புகார்: சிவில் வழக்காக முடித்துவைத்த துணை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் சம்மன்

0
0

வீடு புகுந்து பெண்களைத் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும், சிவில் வழக்கு என முடித்துவைத்த பரங்கிமலை காவல் துணை ஆணையரை ஆகஸ்ட் 6-ம் தேதி நேரில் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ராஜேந்திரன் என்பவர் கட்டிடம் கட்டுவது தொடர்பாக, வழக்கறிஞர் குருபிரசாத் என்பவரின் தந்தை நடராஜன் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ராஜேந்திரனின் மனைவி, வழக்கறிஞர்கள் சிலருடன் நடராஜனின் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த பெண்களை தாக்கியதாகப் புகார் அளித்தனர்.

இது சம்பந்தமாக வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளிக்கரணை காவல் நிலைய அதிகாரிகள் மீதும், தனது புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தப் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்கு குறித்து விசாரிக்க பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமிக்கு மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இது சிவில் வழக்கு எனக் கூறி, மீண்டும் வழக்கை முடித்து அறிக்கை அளித்துள்ளார் முத்துசாமி.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் என்.கிருபாகரன், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிக்கரணை ஆய்வாளர் சிவக்குமார் நேரில் ஆஜராகி முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்ட பின், அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த சம்பவம் சிவில் வழக்கு எனக் கூறி, வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்த பரங்கிமலை துணை ஆணையர் எம்.எஸ்.முத்துசாமி ஆகஸ்ட 6-ம் தேதி அன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.