‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு தடை கோரும் வழக்கு: ரூ.5.4 கோடி பாக்கி; கமல்ஹாசன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0
0

தங்கள் நிறுவனத்திற்கு தரவேண்டிய ரூ.5.40 கோடி பணத்தை தராமல் ‘விஸ்வரூபம் 2’ படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என சாய்மீரா பட நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கமல்ஹாசன், ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கமல்ஹாசன் இயக்கி, நடித்த ‘விஸ்வரூபம் 2’ படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கான விளம்பர வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் சார்பில் நேற்று வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் கமல் நடித்து ஆகஸ்ட் 10 அன்று வெளிவர உள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு தடைவிதிக்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அம்மனுவில், ”கடந்த 2008-ம் ஆண்டு ‘மர்மயோகி’ என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

ரூ.100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது. அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது. அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தை தயாரிக்க கமல் பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியாக கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக வரும் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கின் விசாரணையையும் ஆகஸ்ட் 6-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.