விஷால் செய்த கேடுகெட்ட வேலை

0
48

நேற்று மயிலாடுதுறையில் பரபரப்பு! பல்லாண்டுகாலமாக இயங்கி வரும் ‘கோமதி’ என்கிற தியேட்டரில் போலீஸ் நுழைந்தது. ஏன்? ‘ஒரு குப்பை கதை’ படத்தை தியேட்டரில் வைத்து சுட்டிருக்கிறார்கள். பின்பு திருட்டு விசிடியாக பிரிண்ட் போட்டு நாடெங்கிலும் விநியோகம் நடந்திருக்கிறது.

எந்த தியேட்டரில் வைத்து திருட்டுத்தனமாக படம் எடுத்தாலும் அதை கண்டுபிடிக்கிற வசதி இருக்கிறது என்பதையே உணராத ஒண்ணாங்கிளாஸ் பசங்க போல, இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் தியேட்டர்காரர்கள். ‘மனுஷனா நீ’ என்ற படத்தையும் இப்படிதான் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் தியேட்டர் நிர்வாகமே எடுத்து திருட்டு விசிடி காரர்களுக்கு விற்றது. அந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கம்பிக்குள்ளும் தள்ளப்பட்டது அந்தக்கும்பல். தனி ஒரு மனுஷனாக போராடி அதை செய்தார் அப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸாலி. அதற்குள் இன்னொரு சம்பவம். அதுவும் ‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்ளும் மயிலாடுதுறை நகரில் இயங்குகிற தியேட்டர் ஒன்றில் வைத்து!

க்யூப் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட தொகையை கட்டினால் அது எந்த தியேட்டரில் எடுக்கப்பட்ட திருட்டு பிரிண்ட் என்பதை சொல்லிவிடுவார்கள். அதன்படி இந்த திருட்டை அறிந்த தயாரிப்பாளர் அஸ்லம், சைலன்ட்டாக போலீஸ் மற்றும் ஜுனியர் விகடன் உதவியுடன் மயிலாடுதுறையில் போய் இறங்கிவிட்டார். தயாரிப்பாளர் சங்கத்தின் உதவியை கேட்பது பிரச்சனையில்லை. அங்கிருக்கும் கருப்பு ஆடுகள் யாராவது முன் கூட்டியே தியேட்டருக்கு போட்டுக் கொடுத்துவிட்டால்? அதனால் யாருக்கும் சொல்லாமல் அதிகாரிகள் துணையோடு போய் இறங்கி அதிரடி ஆக்ஷன் எடுத்தார் அஸ்லம். ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தியேட்டர் முதலாளி தலைமறைவு.

உண்மை இப்படியிருக்க… தயாரிப்பாளர் சங்க வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவலை அவசரம் அவசரமாக பரிமாறினார்கள். இந்த ஆக்ஷனே ஏதோ விஷாலின் வழிகாட்டுதலின் பேரில்தான் நடந்தது என்று வெட்டி சந்தோஷப்பட்டது அந்த தகவல். கொஞ்சம் கூட விஷாலுக்கும் இந்த ஆக்ஷனுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான் நிஜம். அப்படியிருக்க… ஏனிந்த போலி சந்தோஷம் விஷால்?

விஷால் ஒரு போராளி என்று உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட போராளி, அற்ப சந்தோஷங்களுக்காக அடுத்தவரின் உழைப்புக்குள் தலையை நுழைத்து வெறும் ‘பெயராளி’ ஆகிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்லி புலம்ப?