விதவைகளின் நலன்களைப் பாதுகாத்திட சட்டம் வேண்டும்: மாநிலங்களவையில் திருச்சி சிவா தனிநபர் தீர்மானம்

0
0

நாட்டில் விதவைகள் நலத்திற்காகப் பொருத்தமான சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இதை திமுகவின் மூத்த உறுப்பினர் திருச்சி சிவா நேற்று முன்தினம் கொண்டுவந்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதன் இறுதி நாளில் மாநிலங்களவை உறுப்பினர்களின் தனி உறுப்பினர் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா, நாட்டில் விதவைகள் படும் துன்பங்களை அடுக்கி, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பொருத்தமான சட்டத்தை நிறைவேற்றிட அரசாங்கம் முன்வர வேண்டும் என ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன்மீது உரையாற்றினார்.

தனது உரையில் திருச்சி சிவா கூறியதாவது:

2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் விதவைகளின் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 61 ஆயிரத்து 278 ஆகும். அதாவது நாட்டின் மொத்த பெண்களின் தொகையில் 7.37 சதவீதமாகும். இது உலகிலேயே அதிகம் உள்ள விதவைகளின் எண்ணிக்கையாகும். விதவைகள் நம் நாட்டில் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.

விதவைகள் மறுமணம் என்பது அபூர்வமாகும். அவர்கள் பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, சட்டரீதியாக மற்றும் உடல்நல ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலான விதவைகள் முறையான பயிற்சியோ, கல்வியோ இன்றி இருப்பதால், அவர்களுக்குத் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேலை தேடிக்கொள்வதிலும் சிரமங்கள் இருக்கின்றன.

பத்தாம்பசலித்தனம்

சமூகத்தில் ஊறிப்போயிருக்கிற பத்தாம்பசலித்தனமான பழக்கவழக்கங்களின் காரணமாக, கணவன் இறந்துவிட்டால், அது மனைவியின் வாழ்க்கையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சமூகரீதியாக அவரும் கொல்லப்பட்டு விடுகிறார். பழைய கூட்டுக்குடும்ப கட்டமைப்பு இன்றையதினம் புதிய தனிக்குடித்தனக் கட்டமைப்பாக மாறியுள்ள நிலையில், கணவன் இறந்துவிட்டால் மனைவியை எவர் வைத்துக்கொள்வது என்பதில் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.

தாம் பெற்ற உரிமை விதவைகளுக்குத் தெரியாது

விதவைகளைப் பேணிப் பாதுகாத்திட எக்குடும்பத்தினரும் முன்வருவதில்லை. பெண்கள் மக்கள் தொகையில் 72 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 70-74 வயதுக்கிடையிலான விதவைகளில் 60 சதவீதத்தினர் போதிய சுகாதாரப் பாதுகாப்பு வசதி இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

1956 ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டத்தின்கீழ் விதவைகளுக்கு சொத்துரிமைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தாங்கள் இவ்வாறு உரிமைகள் பெற்றிருக்கிறோம் என்று பெரும்பாலான விதவைகளுக்குத் தெரியாது.

விதவைகள் மீதான ஆய்வறிக்கை

2016-ம் ஆண்டில் மகளிருக்கான தேசிய ஆணையம் நாட்டில் உ.பி., உத்தர்காண்ட மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள விதவைகளின் நிலைமைகள் குறித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இவர்களில் 84 சதவீதத்தினர் ஸ்வாதார் கிரே (Swadhar Greh) என்னும் சேவை இல்லங்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு குடும்பச் சொத்தில் எவ்விதமான பங்கும் அளிக்கப்படவில்லை என்றும் அந்த ஆய்வறிக்கை கூறியிருக்கிறது.

புண்ணியத் தலங்களில் விதவைகள்

நாட்டில் புண்ணியத் தலங்கள் என்று கூறப்படும் பிருந்தாவன், மதுரா, வாரணாசி போன்ற இடங்களில் உற்றார் உறவினர்களால் கைவிடப்பட்ட ஆதரவற்ற விதவைகள் மிகப்பெருமளவில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஜீவனத்திற்காக அரசாங்கத்தையே முழுதும் சார்ந்திருக்கிறார்கள். தற்சமயம் அரசாங்கத்தின் சார்பில் இத்தகைய விதவைகளைப் பராமரித்திட எவ்விதத் திட்டத்தையும் அமல்படுத்திடவில்லை. இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம் என்ற ஒன்று மட்டும் இருக்கிறது.

பிருந்தாவனில் ஒரு லட்சம் விதவைகள்

இந்தியக் குடிமக்கள்தான். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் உ.பி.யின் பிருந்தாவனில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று இருப்பிடங்களோ, உணவு அளிக்கும் திட்டங்களோ எதுவும் கிடையாது. எனவே, அவர்கள் தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகும். எனவேதான் இந்தத் தனி உறுப்பினர் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்.

நான் ஒரு விதவன்

நான் ஒரு விதவன்தான். (I am a widower) ஆனால் அதனைக் காட்டும் விதத்தில் எனக்கு எவ்வித அடையாளமும் கிடையாது. ஆனால் ஒரு பெண் விதவையாகிவிட்டால் எத்தனை அடையாளங்கள்? அவர்கள் மற்ற பெண்கள் போல் சமூகத்தில் இயங்கிட முடியாது. இத்தகைய சமூகப் பாகுபாடு அவர்களை மிக மோசமான நிலைமைக்குத் தள்ளிவிடுகிறது. இதன்காரணமாக அவர்கள் தங்கள் வாழ்க்கையின் இறுதிக் காலத்தை மிகவும் மோசமான முறையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

நான் கேள்விப்பட்டதென்னவெனில், உத்தரப் பிரதேசத்திலோ, மேற்கு வங்கத்திலோ ஒரு பெண் விதவையாகிவிட்டார் என்றால், அவரை அவர்களது குடும்பத்தினர் இத்தகைய இடங்களுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள் என்பதாகும். அதன்பின் அவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படியாவது சொந்தமாகக் கழித்துக்கொள்ள வேண்டும்.

விதவைகளுக்கு சட்டம் இல்லை

சில அரசு சாரா நிறுவனங்கள் அவர்களுக்கு ஏதோ கொஞ்சம் உதவி செய்கின்றன. அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு எட்டு ரூபாய் கொடுக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரு நபர் எட்டு ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்திட முடியும்? இதுபோன்ற நிலைமை பிருந்தாவனில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இதுதான் நிலைமை. அவர்களின் நலனைப் பாதுகாத்திட அரசின் தரப்பில் எவ்விதமான சட்டமும் இல்லை..

மனித ஜென்மங்கள் இல்லையா?

நான் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோதே என் தந்தையை இழந்துவிட்டேன். அப்போது என் அம்மாவிற்கு 29 வயது. அவர்கள் எப்படி சமூகத்தில் சுதந்திரமாக இயங்க முடியவில்லை என்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் சுதந்திரமாக திருமண விழாக்களில் கலந்துகொள்ள முடியாது. விதவைகள் புண்ணியத் தலங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வீட்டிற்கு வெளியில் வரக்கூடிய மனித ஜென்மங்களாக அவர்களைக் கருதிட மாட்டார்கள்.

பெண் இனம் மீதான கொடுமை

ஒரு பெண் விதவையாகிவிட்டால் அவருக்கு மொட்டையடிக்கும் வழக்கம் இப்போதும் சில பகுதிகளில் உண்டு. சில பகுதிகளில் அவர்கள் தங்கள் ஜாக்கெட்டுகளை அணியக் கூடாது. பெண் இனத்திற்கு இப்படிப்பட்ட கொடுமைகளை ஏன் அளித்திட வேண்டும்? இக்கொடுமைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறேன். விதவைகள் உலகம் முழுதும் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் போல வேறெங்கும் கிடையாது.

மனுஸ்மிருதியின் பழக்க, வழக்கங்கள்

நம் நாடு சாதி அடக்குமுறையைக் கொண்டதாகும். ஒவ்வொருவனும் தன்னை மற்றொருவனை விட உயர்ந்த சாதி என்று பீற்றிக்கொள்வான். பெண்களும் அப்படித்தான் தாழ்த்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். யாரோ ஒருவ மனுஸ்மிருதியில், சில பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறான். நாம் அவற்றிலிருந்து வெளிவர வேண்டும்.

அரசங்காத்தின் கடமை

விதவைகள் என்றால், தன்னுடைய கணவனை இழந்தவள் என்று பொருள். ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு தான் பிறந்த வீட்டிலிருந்து அனைத்தையும் விட்டுவிட்டுக் கணவனின் இல்லத்திற்குச் செல்கிறாள். துரதிர்ஷ்டவசமாக அவள் தன் கணவனை இழந்துவிட்டால், அவள் கதி என்ன? அவளைக் கணவனின் குடும்பத்தினர் ஏற்கத் தயாரில்லை என்றால், அவள் விரட்டப்படுகிறார், எவரும் ஆதரிக்காது விடப்படுகிறார். இப்படிப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

விதவைகளுக்கு கருணாநிதியின் பணி

கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது, மறுமணம் போன்று விதவைகளுக்காக எண்ணற்ற புனர்வாழ்வுத் திட்டங்களைக் கொண்டுவந்தார். தமிழில் விதவைகள் என்று கூறப்படுவதை அவர் கைம்பெண் என்று மாற்றினார். விதவைகளின் குழந்தைகளுக்கு கல்வி கற்க நிதி உதவி வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். இட ஒதுக்கீட்டின் மூலம் மறுமணம் செய்துகொண்ட விதவைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இது அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாபெரும் சுயமரியாதை வரலாறு படைத்திட்ட இயக்கத்தைச் சார்ந்தவன் என்ற முறையில்தான் இந்தத் தீர்மானத்தை இங்கே முன்மொழிகிறேன். நாட்டில் உள்ள விதவைகளின் நலன்களைப் பாதுகாத்திட உரிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.