விஜய் மல்லையாவின் லண்டன் வீட்டில் சோதனை நடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி

0
0

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் வீட்டில் சோதனை நடத்தவும், இங்கிலாந்தில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கவும் அந்நாட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து நீதீமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகிகள் உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தன. அதனை இங்கிலாந்திலும் பதிவு செய்தன.

சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா முறையிட்டார். ஆனால், தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அதோடு விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதியும் வழங்கியது.

இதனிடையே, விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கவும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் அனுமதி கோரி இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தித்தின் வர்த்தக கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மல்லையாவுக்கு சொந்தமாக லண்டனில் உள்ள வீடு மற்ற இடங்களில் சோதனை நடத்தவும், அவரது சொத்துக்களை முடக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்ற அமலாக்கப்பிரிவு அதிகாரி தேவைப்பட்டால் இந்த சோதனையை நடத்தலாம் என்றும், அவரது சொத்துக்களையும் முடக்கி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் இங்கிலாந்து உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக லேடிவாக், குயின் ஹு லேன், டெவின், வெல்வியான், பிரம்பிள் உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் உள்ளன. இவற்றை முடக்க தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவு வங்கிகள் கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. ஏற்கெனவே விஜய் மல்லையாவுக்கு இந்தியாவில் உள்ள சொத்துக்களை முடக்கியுள்ள வங்கிகள் கூட்டமைப்பு இனிமேல் லண்டனில் உள்ள சொத்துக்களை முடக்கி பறிமுதல் செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.