விஜயகாந்த் அமெரிக்கா பயணம்: ஒரு மாதம் தங்கி மருத்துவ சிகிச்சை பெறுகிறார்

0
11

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். மனைவி பிரேமலதா, மகன்கள் உடன் செல்கின்றனர். அவர் ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற உள்ளார்.

தமிழகத்தில் தேமுதிகவின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில், புதிய நிர்வாகிகள் நியமனம், தொண்டர்களை அழைத்து புகைப்படம் எடுத்தல், மாவட்ட செயலாளர்களுடன் மாதாந்திரக் கூட்டம் என பல் வேறு நடவடிக்கைகளை கட்சித் தலைவர் விஜயகாந்த் எடுத்து வருகிறார். அவ்வப்போது வெளி நாடு சென்று மருத்துவ சிகிச்சையும் பெறுகிறார்.

இதற்கிடையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த 4-ம் தேதி நடந்த தலைமை செயற்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்துகொண்டார்.

மருத்துவ சிகிச்சைக்காக விரைவில் அமெரிக்கா செல்லப்போவதாக நிர்வாகிகள் மத்தியில் அவரே அறிவித்தார்.

இந்நிலையில், அவர் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக புறப்பட்டுச் செல்கிறார். மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோரும் உடன் செல்கின்றனர். அமெரிக்காவில் அவர் ஒரு மாத காலம் தங்கியிருந்து, மருத்துவ சிகிச்சை பெறுவார் என தேமுதிக நிர்வாகிகள் கூறினர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, ‘‘தேமுதிக தலை வர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அவரை வழியனுப்ப நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வரக்கூடாது என்று தலைமை அலுவலகம் உத்தரவிட்டுள்ளதால், யாரும் தற்போது விமான நிலையம் செல்ல வில்லை.

மருத்துவ சிகிச்சை முடிந்து புதுத் தெம்புடன் சென்னை திரும்பியதும், பழைய உற்சாகத்துடன் மீண்டும் பொதுக்கூட்டம், மேடைகளில் அதிக நேரம் பேசுவார் என்று எதிர்பார்க்கிறோம். செப்டம்பர் மாதத்தில் நடக்கும் மாநாட்டில் தலைவர் விஜயகாந்தின் கம்பீரக் குரலை கேட்க ஆவலாக இருக்கிறோம்’’ என்றனர்.