வார்டு வரையறை முடிந்து 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தத் தயார்: உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில்

0
0

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி அட்டவணை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்திருந்தது. இந்நிலையில் வார்டு வரையறை இந்த மாதம் முடிந்து அரசு அனுமதி அளித்தால் 3 மாதத்தில் தேர்தல் நடத்தத் தயார் என்று தமிழக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் 2017 மே 15 -ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கக் கெடு விதித்தது.

அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி அளித்த உத்தரவில் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைச் செயல்படுத்தாத மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த வாரம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தலை நடத்துவது தொடர்பாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், எத்தனை ஆண்டுகள்தான் தேர்தலை நடத்த திட்டம் போடுவீர்கள் என கேள்வி எழுப்பினர். கடந்த ஆண்டே 2 முறை தேர்தலை நடத்த உத்தரவிட்டும், இதுவரை ஏன் அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை என்றும் வினவினர்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதோடு அன்றைய தினம் தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகம் முழுவதும் உள்ள வார்டு வரையறை பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இந்தப் பணிகள் ஆகஸ்டு 15-ம் தேதிக்குள் முடியும். அவ்வாறு முடிவடைந்த பின்னர் அனைத்தையும் ஒருங்கிணைத்து மாநில அரசிடம் ஆக.31-க்குள் அறிக்கை அளிக்கப்படும்.

அவ்வாறு வரையறை அறிக்கை அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் பரிசீலித்து அனுமதி கொடுத்த பின்னர் 3 மாதத்திற்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ள நிலையில் இன்று மதியத்துக்கு மேல் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.