வாயால் கெட்ட இளைஞர்; தமிழக போலீஸாரை அவதூறாக திட்டி வீடியோ: குவைத்தில் வேலை செய்தவரை இந்தியா வரவழைத்து கைது

0
0

திருச்சி போக்குவரத்து காவலரால் எட்டி உதைக்கப்பட்டு உயிரிழந்த உஷா விவகாரத்தில் தமிழக போலீஸாரை அவதூறாக திட்டி வாட்ஸப்பில் காணொலி வெளியிட்ட இளைஞர் 5 மாதத்துக்கு பின் குவைத்திலிருந்து இந்தியா வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தஞ்சையை சேர்ந்த ராஜா கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி தனது மனைவி உஷாவுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி சென்றபோது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் அவர்களை விரட்டிச் சென்று எட்டி உதைத்ததில் உஷா கீழே விழுந்து உயிரிழந்தார்.

காவல் ஆய்வாளரால் உஷா மரணமடைந்ததாக ஆத்திரமடைந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் காவல்துறைக்கு எதிரான விமர்சனமாக மாறியது.

பலரும் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் காமராஜை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு உஷாவுக்கு உதவி நிதி அளித்தது. ஆய்வாளர் காமராஜ் விபத்து பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் தமிழக காவல்துறையினருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளில் பேசிய காணொலி ஒன்று பரபரப்பானது.

அதில் பேசிய இளைஞர் மிகவும் அவதூறாக போலீஸுக்கு எதிரான வார்த்தைகளை பிரயோகித்திருந்தார். இந்த காணொலிகாட்சி வாட்ஸ் அப்பில் வைரலானது. காணொலி காட்சி வெளியிட்ட இளைஞர் மீது பலரும் புகார் அளித்த நிலையில் அவர்மீது கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி திருச்சி திருவெறும்பூர் காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தேடினர்.

போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் பெயர் சங்கரலிங்கம் என்பது தெரியவந்தது. அவரது பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் கணக்குகளை வைத்து அவரது முகவரியை கண்டறிந்தனர். அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அடுத்த நெடுங்குளம் கிராமத்தில் வசிப்பது அறிந்து அங்கு சென்றனர்.

ஆனால் அவர் அங்கு இல்லை, அவர் குவைத்தில் வேலை செய்து வருவது தெரிய வந்தது. இதனையடுத்து குவைத்தில் இருந்து சங்கரலிங்கத்தை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்தனர். திருச்சி திருவெறும்பூர் காவல்நிலையத்தில் இருந்து மத்திய உள்துறை செயலகத்திற்கு குவைத்தில் வேலை செய்து வரும் சங்கரலிங்கத்தை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

உள்துறை செயலகம், வெளியுறவு அமைச்சகம் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இந்தியத் தூதரகம் மூலமாக, குவைத் அரசு, சங்கரலிங்கத்தை, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது. குவைத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சங்கரலிங்கம் கடந்த மாதம் 30-ம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வந்து இறங்கினார். அவரை திருச்சி போலீசார் கைது செய்தனர்.

தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல் நல்ல வேலையுடன் குவைத்தில் பணியாற்றியவர் ஆர்வக்கோளாறால் தமிழக போலீஸை விமர்சித்து தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.