வானிலை முன்னறிவிப்பு: 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு

0
0

கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ”கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக அம்மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தாக்கத்தால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை செய்து வருகிறது. அந்த மாவட்டங்களில் இன்றும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இதர பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக் கடலில் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.