வானிலை முன்னறிவிப்பு: தமிழக உள் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

0
0

தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ”தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகள் வழியாக தென் மாநிலங்கள் முழுவதும் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று நிலவி வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மேகங்கள் உருவாகி மிதமான மழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும் படியாக எங்கும் மழை பெய்யவில்லை.

தென்மேற்கு திசையில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.