‘வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டரை’ கண்காணிக்க திட்டம்: விளக்கம் கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

0
0

வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களைக் கண்காணிக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘சமூக வலைதள தகவல் மையம்’ என்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பு மையத்தை அமைக்க மத்திய அரசின் பிஇசிஐஎல் நிறுவனம் சார்பில் அண்மையில் டெண்டர் வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்தை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மஹுவா மொய்திரா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்களின் தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்க தனி மையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாவட்ட அளவில் இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் அரசை விமர்சனம் செய்பவர்கள் குறிவைக்கப்படுவார்கள். மத்திய அரசின் முடிவு மக்களின் அடிப்படை பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரானது. இதனால் ஜனநாயகம் கேள்விக்குறியாகும். மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு மறைமுகமாக பறிக்க முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு ஏற்பு

இம்மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகமது நிஜாம் பாஷா ஆஜராகினர்.

அவர்களின் வாதத்துக்குப் பிறகு, பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அப்போது நீதிபதி சந்திரசூட் கூறியபோது, “வாட்ஸ்அப், ட்விட்டரின் ஒவ்வொரு பதிவையும் கண்காணிக்க அரசு விரும்புகிறதா? இதன்மூலம் ஒட்டுமொத்த நாடும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுகிறதா” என்று கேள்வி எழுப்பினார்.

சமூக வலைதள தகவல் மையத்தை அமைக்க டெண்டர்கள் வந்து சேர ஆகஸ்ட் 20-ம்தேதி கடைசி நாள் என்று பொதுத்துறை நிறுவனமான பிஇசிஐஎல் அறிவித்துள்ளது. அதற்கு முன்பாக ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் மத்திய அரசு விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.