வாடகை வீடு பிரச்சினையில் மோதல்: சமாதானம் செய்த காவலரைத் தாக்கிய 3 பேர் கைது

0
0

வண்ணாரப்பேட்டையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக விசாரணைக்குச் சென்ற காவலரைத் தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரைத் தேடி வருகின்றனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா மேஸ்திரி தெருவில் சந்திரா (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான வீட்டை ஜமீலா (58) என்பவருக்கு சுமார் 12 வருடங்களுக்கு முன்பு லீஸுக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் ஜமீலாவுக்கும் சந்திராவுக்கும் வீட்டைக் காலி செய்வதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, சுமார் 10 வருடங்களாக வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் வீட்டின் உரிமையாளர் சந்திராவுக்கும், ஜமீலாவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஜமீலாவுக்கு ஆதரவாக அப்பகுதியிலுள்ள ஒரு கட்சியைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்டோர் கூடி தகராறில் ஈடுபட்டனர். உடனே, சந்திரா இது குறித்து காவல் கட்டுப்பாட்டறைக்குப் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர்கள் நாகேந்திரன் மற்றும் பிரவீன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்பொழுது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மோதலில் இறங்க முயன்றனர். இதைப் பார்த்த போலீஸார் இருதரப்பையும் சமாதானம் செய்தனர். அப்போது, ஜமீலாவுக்கு ஆதரவாக வந்த நபர்களில் 4 பேர் காவலர் நாகேந்திரனைத் தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

உடனே, காவலர் பிரவீன் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து காவலர் நாகேந்திரனை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவலர் நாகேந்திரனைத் தாக்கியது தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில வழக்குப் பதிவு செய்து, போலீஸார் நான்குபேரையும் தீவிரமாகத் தேடியதில் மூன்று குற்றவாளிகள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நைய்முதீன் (31), வாசீம் (26), அமானுல்லா (52) கைது செய்யப்பட்டனர். மேலும், தப்பிச்சென்ற மசார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நைய்முதீன், வாசீம் மற்றும் அமானுல்லா ஆகியோர் மீது பிரிவு 341, 294(b), 353, 332, 506(2) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.