வாகனங்களை எரிக்கும் சைக்கோ… தேடும் போலீஸ்.. ‘காட்டுப்பய சார் இந்த காளி’! விமர்சனம் | Kattu paya sir indha kali review

0
0

சென்னை: அநியாய வட்டி வாங்கி சாமானிய மக்களை அள்ளல் படுத்துபவர்களை போட்டு தள்ளுபவனே இந்த ‘காட்டுப்பய சார் இந்த காளி’.

சென்னை மாநகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சைக்கோ ஒருவன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை எரித்த சம்பவம் ஞாபகம் இருக்கிறதா… அதை மையமாக வைத்து தான் காட்டுப்பய சார் இந்த காளி படத்தை உருவாக்கியிருக்கார் இயக்குனர் யுரேகா.
அநியாய வட்டிக்கு மக்களுக்கு கடன் கொடுத்து வதைக்கும் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் வாகனங்களும், அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாகனங்களையும் சைக்கோ ஒருவன் எரித்து வருகிறான். அவனை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்வந்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் சைக்கோவை பிடித்தாரா இல்லையா என்பதே கதை.

காட்டுபய காளியாக நடித்திருக்கும் ஜெய்வந்த், போலீஸ் அதிகாரியாக கச்சிதம். ஆனால் பல இடங்களில் ஓவர் டோஸ் தருகிறார். கதாநாயகி ஐராவுக்கு பழைய தமிழ் சினிமா ஹீரோயின் வேடம். அவரளவுக்கு தனது பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்.

சி.வி.குமாரரின் வில்லத்தனம் நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. அபிஷேக், மூணாறு ரமேஷ், மாரிமுத்து என அனைவருமே தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் கதை கந்துவட்டி கொடுமைக்கு எதிரானது. ஆனால் அதைவிட்டுவிட்டு, எங்கெங்கோ சென்று, எதை எதையோ பேசி திரும்புகிறார் இயக்குனர். அதனால் படம் பார்க்கும் போது அலுப்பு ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. நல்ல கதை கருவை வைத்துக்கொண்டு, இப்படி ஒரு ஓவர் டோஸ் படத்தை எடுத்திருக்க வேண்டாம். ஆனால் மக்களை குழப்பியாவது படத்தின் சஸ்பென்சை க்ளைமாக்ஸ் வரை நீட்டித்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் வரும் பெரிய பெரிய வசனங்கள், கதை தேவையில்லாத தனி பிரச்சாரமாக மாறிவிடுகிறது. தற்போது வரும் படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, மேக்கிங் விஷயத்தில் பெரும் சொதப்பல் யுரேகா.

என்ன தான் இந்த காளி காட்டுப்பயலா இருந்தாலும், படம் பார்க்க வர்றவங்களையா இம்சை செய்வான். இருந்தாலும் நல்ல மெசேஜ் தான் சொல்கிறான் ‘காட்டுப்பய சார் இந்த காளி’.