வறட்சி மாவட்டங்களில் நீர்நிலைகளை நிரப்ப நடவடிக்கை தேவை: முத்தரசன்

0
0

வறட்சி மாவட்டங்களில் நீர்நிலைகளை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து நீடித்து வருவதால், கர்நாடக, கேரள அணைகளில் நீர்நிரம்பி தமிழகத்திற்கு மழைநீர் பெருமளவு வந்து கொண்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வறட்சியால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நீரைத் தேக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 135 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் மழைநீர் வருவதற்கான வாய்ப்புள்ள காரணத்தால், வைகை அணையில் நீரை தேக்கி, வைகை அணை பாசனப்பகுதிகளான மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளான ஏரி, குளங்களை நிரப்பிட உரிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அதனைப் போன்று, மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பி இருப்பதுடன், அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதை பயன்படுத்தி, காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்லவும், (இதுவரை செல்லவில்லை) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்பவும் அரசு உரிய நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.