வரி ஏய்ப்புக்காக வருமான வரி சோதனை நடக்கிறது; சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை- அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம்

0
0

சத்துணவு முட்டை கொள் முதலில் முறைகேடு நடக்கவில்லை. வரி ஏய்ப்பு தொடர்பாகத்தான் சோதனை நடந்து வருகிறது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக்நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் அங்காடியை மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் மீன்வளத்தை பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 5 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. அரசு சார்பில் மாதிரி மீன் அங்காடிகள் மாநிலம் முழுவதும் 44 இடங்களில் இயங்கி வருகின்றன. நடமாடும் மீன் அங்காடிகள் 24-ல், 11 அங்காடிகளில் மீன் உணவும் விற்கப்படுகிறது.

திசைதெரியாமல் எல்லை தாண்டி சென்ற மீனவர்களை பல நாட்களுக்குப்பின் இலங்கை கடற்படை பிடித்துள்ளது கண்டனத்துக்குரியது. இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ல் இருந்து தற்போது வரை 3 ஆயிரம் மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வருமான வரிச் சோதனை

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ‘‘வருமான வரித் துறைக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து அவர்கள் சோதனை நடத்துகின்றனர். வரி ஏய்ப்புக்காகத்தான் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதற்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை. சத்துணவு முட்டை கொள்முதலில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை. தன் மீது ஆயிரம் குற்றங்களை வைத்துக் கொண்டு, மு.க. ஸ்டாலின் மற்றவர்களை குற்றம் சொல்லி வருகிறார்’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.