‘வனஜாவை போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கணும்’: ‘செம்பருத்தி’ தொடரின் படப்பிடிப்பு தள சுவாரசியம்

0
1

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘செம் பருத்தி’ தொடரில் ஆதித்யா, பார்வதி காதல் அத்தியாயம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆத்திரம், பழிவாங்கும் படலம், கோபம், சாபம் என பரவிப் படரும் தொடருக்கு நடுவே, அகிலாண்டேஸ்வரியாக வரும் ப்ரியா ராமன் நடிப்பும் அவரைச் சுற்றி நடக்கும் வியூகங்களும் டிஆர்பி ரேட்டிங் அள்ளுகிறது.

தினம் தினம் தொடரில்தான் கோபம் கொப்பளிக்க திரிகிறார்கள், நேரில் என்ன செய்கிறார்கள்.. என்று தெரிந்துகொள்ள, ‘செம்பருத்தி’ தொடரின் படப்பிடிப்பு தளத்துக்கு ஒரு திடீர் விசிட் அடித்தோம். அங்கு நடந்த கலகலப்பான உரையாடல் இங்கே..

முதலில் சந்தித்தது தொடரின் நாயகி ப்ரியா ராமனை. ‘‘எனக்கும் வனஜாவுக்கும்தான் மோதல். ஆனா நாங்க ரெண்டு பேரும்தான் இங்கு படப்பிடிப்பு தளத்தில் சிரிக்க சிரிக்க அதிகம் காமெடித்தனம் செய்றதே. எங்க எல்லோருக்குமே ‘செம்பருத்தி’ படப்பிடிப்பு தளம் ஒரு பிக்னிக் ஸ்பாட் மாதிரிதான் தோணும். அதிலும், தொடரில் வனஜாவா வர்ற பார்வதி மற்றும் என்னுடைய உடைகள், நகை வகைகளுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு. அதுக்காகவே நாங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு அவற்றை ஷாப்பிங் செய்ற வேலை இருக்கே.. அப்பாடா.. அதுவே ஒரு தொடர்கதை. அதே போல, என் மகனாக வரும் ஆதித்யாவை மடக்கிப்போட திட்டம் தீட்டுகிற பார்வதி ஜாலிப் பொண்ணு. இந்த மாதிரி எனக்கு ஒரு சிஸ்டர் இல்லையேன்னு நினைப் பேன். அவ்ளோ ஜாலிப் பேர்வழி’’ என்று ப்ரியா ராமன் முடிப்பதற்குள், சீரியலில் பார்வதியாக வரும் ஷபனா வந்தார்.

‘‘இந்த அகிலாண்டேஸ்வரி அம்மா ஷூட்டிங்ல எவ்ளோ கோபப்பட்டாலும் எனக்கு பயமே வராது. ஏன்னா, அவங்க நேர்ல பழகும்போது ஒரு குழந்தை மாதிரி பாசம் காட்டுவாங்க. அவ்ளோ அன்பா பழகுவாங்க. அப்படிப்பட்ட வங்க எவ்ளோ கோபமா பார்த் தாலும், சீரியஸா எடுத்துக்க மாட் டோம். நான் மும்பை பொண்ணு. நடிப்பில் பெருசா சாதிக்கணும்னு இங்கு வரலை. நடிப்பது பிடிக் கும். அந்த வேலையை சரியா செய்யலாம்னு இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். இங்கு ப்ரியா ராமன், லஷ்மி அக்கா போன்றவர் களை பார்க்கும்போது, இன்னும் இதுல நிறைய தூரம் பயணிக் கணும்னு தோணுது’’ என்றார்.

தொடரில், பல திருப்பங்களை முளைக்கவிடுவது வில்லி வனஜா கதாபாத்திரம்தான். வனஜாவாக நடிக்கும் லஷ்மியை தேடிப் பிடித்த போது, ‘‘இதுக்கு முன்னாடியும் சில நெகடிவ் கதாபாத்திரம் செய்தி ருக்கேன். ஆனால், ‘செம்பருத்தி’ வனஜாவோட ரீச் தனி. விடாமல் தொடர் பார்க்குறவங்க வெளியில என்னை பார்க்கும்போது, ‘வனஜா, நீ நல்லாவே இருக்க மாட்டே.. இரு இரு.. உன்னை போலீஸ்ல பிடிச்சிக் கொடுக்குறோம்’ என்றெல் லாம் என் காதுபடவே சொல் வாங்க. ஒரு நடிகை மேல இவ்ளோ கோபமான்னு தோணும். ஆனா அப்படி கோபப்படுறவங்க யாராவது செட்டுக்கு வந்து எங்க அலப்பறையப் பார்த்தா அவ்ளோதான்.. ‘என்னடா இது இப்படி ஒரு டிராமா குரூப்பா’ன்னு ரசிப்பாங்க’’ என்கிறார் லஷ்மி.

‘‘என்னை மட்டும் விட்டுட்டீங்களே’’ என வேகமாக வந்தார் அகிலாண்டேஸ்வரியின் இரண்டாவது மகனாக நடிக்கும் கதிர். ‘‘நிகழ்ச்சி தொகுப்பாளர், நடனம்னு ஓடிக்கிட்டிருந்த என்னை கூப்பிட்டு ரொமான்ஸ் பண்ணச் சொன்னா எப்படி இருக்கும்? எனக்கு சுத்தமா வரவே இல்லை. அப்பறம் ஷூட்டிங்ல இருக்குற சுவர் பக்கம் திரும்பி நின்னு காதல் பேச்சுகள் பேசி, கொஞ்சம் கொஞ்சமா ரொமான்ஸ் பண்ணக் கத்துக்கிட்டேன். முன்பெல்லாம் ஊர் சுத்துறது, கலாட்டா செய்றதுன்னு யாரோட சொல் பேச்சும் கேட்காம திரிந்தேன். இப்போ கல்யாணம் எல்லாம் முடிந்து நல்ல பையனா இருக்கேன். இருந்தாலும், அந்த பிரம்மச்சாரி லைஃப்ல இருந்த ஜாலி இதுல கொஞ்சம் மிஸ்ஸிங்தான்’’ என்கிறார் கதிர்.

இதுவரை கண்களால் காதல் பேசிய ஆதித்யா, பார்வதி இரு வரும் தற்போது வார்த்தை களாலும், சந்திப்புகளாலும் அசத்தத் தொடங்கியுள்ளனர். இவர்களது கல்யாண நிகழ்வு நெருங்கும்போது, இதுவரை இல்லாத அளவுக்கு அதை புதுமையாக நடத்த சேனல் தரப்பு முடிவெடுத்துள்ளது. அதுவரை காத்திருப்போம்!