வட மாநிலங்களில் தமிழ் மொழி பயிற்றுவிக்க பாஷா சங்கம் – தஞ்சை பல்கலை. ஒப்பந்தம்

0
0

வட மாநிலங்களில் தமிழ் மொழி பயிற்றுவிப்பதற்காக, உத்தரபிர தேசத்தின் பாஷா சங்கத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, உத்தர பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் அடுத்த மாதம் முதலாக தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் உள்ள பல் வேறு மாநிலங்களில் கோடிக்கணக் கிலான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறு புலம் பெயர்ந்து வசித்து வருபவர்களின் குழந்தைகளுக்கு தங்கள் தாய் மொழியான தமிழ்மொழியில் போதிய அளவு அறிவோ, புலமையோ இருப்பதில்லை. மேலும், தாங்கள் வசிக்கும் மாநிலங்களின் பேசப்படும் பிரதான மொழியின் ஆதிக்கத் தால், அக்குழந்தைகள், தமிழ் மொழியையே நாளடைவில் மறக்கும் நிலைக்கு தள்ளப்படு கின்றனர்.

இதனைக் கருத்தில்கொண்டு, தமிழகத்துக்கு வெளியேயும் தமிழ் மொழியை பரப்ப தமிழக அரசு முடிவு எடுத்தது. அதன் படி, தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் மற்றும் அப்பகுதியினர் இடையே தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கும் பணியை தஞ்சை தமிழ்ப் பல் கலைக்கழகம் மூலமாக மேற் கொள்ளும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியது.

இந்நிலையில், வட இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் தமிழ் மொழிக் கல்விக்கான சான்றிதழ் மற்றும் டிப்ளமோ பயிற்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, உத்தரபிரதேசத்தின் பாஷா சங்கத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகம் நேற்று முன்தினம் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பாஷா சங்கத்தின் தேசியப் பொதுச்செயலாளரான முனைவர்.எம்.கோவிந்தராஜன் கூறியதாவது:

ஏற்கெனவே, வட மாநிலங்களில் தமிழ் மொழி பயிற்றுவிக்கும் பணியை அவ்வப்போது செய்து வருகிறோம். இதை ஊக்குவித்து முறைப்படுத்தும் விதமாக, இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் இனி சான்றிதழ் படிப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும், கான்பூர் மற்றும் அலகாபாத் நகரங்களில் பாஷா சங்கம் சார்பில் தமிழ் மொழிக் கல்விக்கான பயிற்சி விரைவில் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மொழிகளை இணைப்பதற்காக தேசிய அளவில் ‘பாஷா சங்கம்‘ என்ற அமைப்பு வட இந்தியர்களால் 1976-ம் ஆண்டு அலகாபாத்தில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது, தமிழ் மொழிக் காக திருவள்ளுவர், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, பாரதியார் மற்றும் பாரதிதாசன் உட்பட பல தமிழ் கவிகளுக்கு அலகாபாத்தில் விழா எடுத்து மலர்களையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.