வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த கல்லூரி பேராசிரியர்: குவியும் பாராட்டு

0
2

கும்பகோணத்தில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை போலீஸாரிடம் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒப்படைத்தார்.

கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் புளியஞ்சேரியை சேர்ந்தவர் நரசிம்மலு மகன் செந்தில்வேலன் (38). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செந்தில்வேலன் திருமங்கலக்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், இரவு நேரங்களில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உறவினரின் இரவு நேர ஹோட்டலில் சப்ளையராக பணியாற்றி வருகிறார். மேலும், கல்லூரி விடுமுறை தினங்களில் அவ்வப்போது ஆட்டோவும் ஓட்டி வருமானத்தை ஈட்டி வருகிறார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை செந்தில்வேலன் கும்பகோணம் உச்சிபிள்ளையார்கோவில் அருகே உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மையத்தில் தன்னுடைய வங்கி கடன் கணக்கில் எவ்வளவு பணம் செலுத்த வேண்டியுள்ளது என்பதனை சரிபார்க்க சென்றார். அப்போது ஏடிஎம் மையத்தின் இயந்திரத்தில் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அங்கு வேறு நபர்கள் யாரும் இல்லாததால் அந்த பணத்தை எடுத்து எண்ணி பார்த்தபோது அதில் ரூ.10 ஆயிரம் ரொக்கம் இருந்தது.

இதையடுத்து தன்னுடைய நண்பர் விஜயகுமாருக்கு செல்போன் மூலம் தகவல் கூறினார். அவர் உடனடியாக ஏடிஎம் மையத்துக்கு வந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமாருக்கு தகவல் கூறினர். பின்னர் ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் செந்தில்வேலன், விஜயகுமார் ஆகிய மூவரும் ஆயிகுளம் சாலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளைக்கு சென்று அங்குள்ள கிளை மேலாளர் ஹரிஹரனிடம் வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை ஒப்படைத்தனர். அப்போது கல்லூரி பேராசிரியரின் நேர்மையை காவல் ஆய்வாளர் மற்றும் வங்கி மேலாளர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றவர் பணத்தை எடுக்காமல் சென்றதும், இது தொடர்பாக யாருடைய வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டது என வங்கி பணியாளர்கள் விசாரித்து வருகின்றனர்.