‘லோக் ஆயுக்தா’ சந்தேகமும், விளக்கமும்: சமூக ஆர்வலர் செந்தில் ஆறுமுகம் விரிவான பேட்டி

0
0

தமிழகத்தில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ள ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தில் உள்ள அம்சங்கள் என்னென்ன, லோக் ஆயுக்தாவின் உண்மையான வரையறை, மற்ற மாநிலங்களில் எப்படி உள்ளது போன்ற விரிவான கேள்விகளுக்கு சமூக ஆர்வலர் செந்தில் ஆறுமுகம்  விரிவாகப் பதில் அளித்துள்ளார்.

லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை ஏன் அமைக்கவில்லை என்பது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு கூறும் காரணங்கள் ஏற்கும்படி இல்லை என தெரிவித்து, ‘லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

மேலும், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும், இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்தக் கூட்டத்தொடரிலேயே லோக் ஆயுக்தா அமைக்கும் சட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ள நிலையில், தமிழகத்தில் அமையும் லோக் ஆயுக்தா குறித்த பல்வேறு சந்தேகங்களை நீண்டகாலமாக லோக் ஆயுக்தா அமைக்கப் போராடிவரும் சட்டப்பஞ்சாயத்து இயக்க நிர்வாகி செந்தில் ஆறுமுகத்திடம் ‘இந்து தமிழ்’  சார்பாகக் கேட்டோம்.

லோக் ஆயுக்தா என்றால் என்ன?

ஆளுங்கட்சியின் தலையீடு ஏதுமின்றி தன்னாட்சியாக, முழு அதிகாரத்தோடு செயல்படக்கூடிய லஞ்ச ஊழல் ஒழிப்புக்கான ஆணையம் மற்றும் அரசு சேவைகளில் மக்களுக்குள்ள குறைபாடுகளை தீர்க்க உதவும் ஒரு மையம். இதை லோக் ஆயுக்தா என்று அழைக்காமல் தமிழில் அழகாக கூற வேண்டுமானால், ‘ஊழல் விசாரிப்பு மற்றும் மக்கள் குறைதீர் ஆணையம்’ என்று அழைக்கலாம். இதை கோரிக்கையாகவே வைத்துள்ளோம்.

லோக் ஆயுக்தாவின் அர்த்தம் என்ன? இந்த எண்ணம் எப்போது உதயமானது?

லோக் ஆயுக்தா மக்களால் நியமிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம். சுதந்திரம் பெற்ற பின்னர் அரசின் திட்டங்கள், சட்ட திட்டங்கள் மக்களுக்கு முறையாகச் சென்று சேர்கிறதா என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விவாதம் 1960-களில் தொடங்கியது. பொதுவாழ்க்கையில் இருபவர்கள் ஊழலில் ஈடுபடுவதால், ஊழல் முக்கியப் பிரச்சினையாக இருந்ததால் அதுவும் கூடுதலாக சேர்க்கப்பட்டது. இதுதான் லோக் ஆயுக்தா என்ற வடிவத்தின் முக்கிய ஆரம்பம்.

ஊழல் ஒழிப்பு தவிர லோக் ஆயுக்தாவின் முக்கியப் பணி என்ன?

ஊழல் ஒழிப்பு தவிர மக்கள் அரசு சேவைகள் குறைபாடு இருந்தாலும் மன்றத்தில் முறையிடலாம். உதாரணமாக குடிநீர், மின்சாரம் போன்ற அரசின் சேவைகளைக் குறிப்பிடலாம்.

யார் லோக் ஆயுக்தா தலைவராக இருப்பார்?

இதன் தலைவராக யார் இருப்பார் என்பதில் ஒரு வடிவம் இல்லை. உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வு நீதிபதி கூட இருப்பார். இதில் சில விதிவிலக்குகள் உண்டு.

லோக் ஆயுக்தா தலைவரை யார் நியமிப்பார்கள்?

யார் நியமிப்பது என்கிற நடைமுறையையும் அரசே தீர்மானிக்கும், உதாரணமாக ஆந்திராவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே நியமிக்கும் நடைமுறை உள்ளது. மஹாராஷ்டிரா சட்டப்படி தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் சேர்ந்து நியமிக்கலாம். சில மாநிலங்களில் எதிர்க்கட்சித்தலைவர் மாநில முதல்வர், சபாநாயகர் சேர்ந்து நியமிக்கலாம் என்று உள்ளது.

ஆகவே இதைத் தீர்மானிக்கும் சட்டத்தை மாநில அரசே வழிமுறையை உருவாக்கிக்கொள்ளலாம் என்று உள்ளது.

மாநில அரசு முடிவு செய்யும் என்றால் அதற்கேற்றபடி சட்டத்தை தனக்கு சாதகமாக உருவாக்க வாய்ப்புள்ளது அல்லவா?

ஆமாம், அப்படி ஒரு வாய்ப்பு உள்ளது. இதற்கான தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு இதில் கொடுக்கவில்லை. ஆனால் இதில் இன்னொரு அம்சம் என்னவென்றால் லோக் ஆயுக்தா தலைவராக வருபவர் நீதிபதியாக இருப்பதால் சாதகமாக செயல்பட வாய்ப்பு குறைவு.

அதனால் நாங்கள் அடிப்படை வரையறைகளை அளிக்கவேண்டும் என்று கோருகிறோம். மத்திய அரசு லோக்பால், மாநில அரசு லோக் ஆயுக்தா என்று இருக்கும் அதே நேரத்தில் நியமனம் போன்ற விஷயங்களில் வரையறை வேண்டும் என்கிறோம்.

தமிழகத்தில் 10-ம் தேதி லோக் ஆயுக்தா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைவரை நியமிக்கும் குழுவில் யார் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தற்போது ஆளுங்கட்சி ஒரு வலுவான ஆளாக தனக்கு வேண்டியவர்களை நியமிக்கும் செயலில் ஈடுபடவே வாய்ப்புள்ளது. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் என குழுவில் போடுவார்கள். இதன் மூலம் ஆளுங்கட்சி தனது ஆதிக்கத்தைக் கொண்டுவர முயலும்.

நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், லோக் ஆயுக்தா தலைவரைத் தேர்வு செய்யும் குழுவில் சபாநாயகர் தேவை இல்லை என்கிறோம். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமைப்பாக இருந்தால் அது முறையான தேர்வாக அமைய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வரும் ஜூலை 10-ம் தேதி லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா?

கண்டிப்பாக வாய்ப்புள்ளது என்று கருதுகிறேன். காரணம் ஒருபக்கம் அனைத்துக் கட்சிகளும், சட்டப் பஞ்சாயத்து போன்ற அமைப்புகளும், மீடியாக்களும் நெருக்கி வருகிறார்கள். மறுபக்கம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். துணை முதல்வரும் அறிவித்துள்ளார். இவர்களுக்கு விருப்பமே இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றித்தான் ஆக வேண்டும்.

சட்டம் இயற்றிவிட்டு கிடப்பில் போடும் வழக்கமான நடைமுறை லோக் ஆயுக்தாவிலும் நடக்க வாய்ப்புண்டா?

இதில் இரண்டு நடைமுறை உண்டு. முதலில் இந்த சட்டத்தை பாஸ் பண்ணும் முறை. எப்படி நடைமுறைப்படுத்துவது, எப்படி தேர்ந்தெடுப்பது, என்னென்ன அதிகாரங்கள் வழங்குவது போன்ற நடைமுறை சட்டம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிப்பது. அது நடக்கும்.

இரண்டாவது பிரிவு, அடுத்த கட்டம் இருக்கிறது அல்லவா? நீதிபதிகளைத் தலைவராக நியமிப்பது. அதாவது, சட்டத்தை நடைமுறையில் அமல்படுத்துவது. அதைக் கிடப்பில் போட வாய்ப்புள்ளது. அதாவது யாரை நியமிப்பது, இதற்கு யார் தலைவராக இருப்பது , அதன் நடைமுறைகள் போன்றவற்றை சட்டத்தை இயற்றிவிட்டு நியமிக்காமல் விட்டுவிடுவார்கள்.

அப்படி எந்த மாநிலத்திலாவது சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தாத முன் உதாரணம் உள்ளதா?

உண்டு. குஜராத்தில் 2003-லிருந்து 2013 வரை லோக் ஆயுக்தாவுக்கு நிர்வாகியைப் போடவில்லை. ஆளுநர் தலையிட்டு நிர்வாகியை நியமித்தார், அன்று அதை உச்ச நீதிமன்றம் வரை அப்போதைய முதல்வர் மோடி சென்று சாலஞ்ச் செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் நிர்வாகி நியமனம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

2013-ல் மத்திய அரசில் லோக்பால் கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால் ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் வந்தவர்கள் இதுவரை லோக்பாலுக்கு தலைவரை நியமிக்கவே இல்லை. அதற்கான நடைமுறையை ஆரம்பிக்கவே இல்லை.

கேட்டால் எதிர்க்கட்சி 10 சதவிகிதம் யாரையும் நியமிக்கவில்லை. அதனால் தான் லோக்பாலுக்கான நடைமுறையைத் தொடங்கவில்லை என்ற வாதம் வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கும் வழிமுறை உண்டு என்பதை கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். தற்போது லோக்பால் பிரச்சினையும் உச்ச நீதிமன்றத்தின் முன் விசாரணையில் உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் லோக் ஆயுக்தாவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

லஞ்ச ஒழிப்புத்துறை மாநில அரசின் வரம்பிற்குள் வரும், லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள அதிகாரிகளை மாநில அரசு நினைத்தபடி தூக்கி அடிக்கலாம், தங்களுக்கேற்ற ஆட்களை நியமிக்கலாம். ஆனால் லோக் ஆயுக்தாவில் அப்படிச் செய்யமுடியாது. அதன் நியமனம் மாநில அரசு சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் நீக்க முடியாது, மாற்றவும் முடியாது.

லோக் ஆயுக்தா தலைவர் லஞ்சப் புகாரின் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கலாம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யலாம். அமைச்சர்கள், முதல்வர், அதிகாரிகள் வீட்டுக்குள் சென்றுகூட ரெய்டு நடத்த உரிமை உண்டு. பொதுமக்கள் சேவை புகாரின் பேரில் நோட்டீஸ் அனுப்பலாம். விளக்கம் கேட்கலாம்.

ரெய்டு நடத்த போலீஸ் வேண்டுமே? அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கும்?

லோக் ஆயுக்தா போலீஸ் என்று தனியாக இருக்கும். இதற்கான போலீஸார் மாநில போலீஸாராக இருந்தாலும் லோக் ஆயுக்தா கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.

மேற்சொன்னவை மாநில அரசு இயற்றும் சட்டத்தின் பிரிவில் இருக்க வேண்டும். இதில் முதல்வர், அமைச்சர்கள் வீடுகளுக்கு ரெய்டு போகக் கூடாது என்று விதிவிலக்கு கொடுத்தால் அது நடக்காது. அதனால் தான் நாங்கள் சட்டத்தை முறையாக இயற்றவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கர்நாடகாவில் உள்ள லோக் ஆயுக்தா சட்டப்பிரிவு 13 பற்றி சொல்லுங்கள்?

முதல்வர் மீதோ, அமைச்சர் மீதோ, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒரு புகார் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போதுதான் சட்டப்பிரிவு 13-ன் கீழ் லோக் ஆயுக்தாவின் பணி தொடங்கும். இந்தப் பிரிவின் கீழ் உங்கள் மீது புகார் வந்துள்ளது, நீங்கள் பதவியில் இருந்தால் விசாரிப்பதில் குறுக்கீடு இருக்கும். ஆகவே, நீங்கள் பதவி விலக வேண்டும் என்று கோரலாம்.

அவர்கள் பதவி விலகுகிறார்கள், விலகவில்லை அது பிறகு உள்ள பிரச்சினை. ஆனால் இப்படி ஒரு வாய்ப்பு அந்தப் பிரிவில் உள்ளது.

தற்போது தமிழக அரசு இந்தப் பிரிவு இல்லாமல் சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா?

வாய்ப்புள்ளது. அதனால்தான் இந்தப் பிரிவு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்தப் பிரிவு இருந்தால்தான் லோக் ஆயுக்தாவுக்கு உரிய அதிகாரம் இருக்கும். ஒரு அழுத்தம் இருக்கும்.

பொதுமக்கள் சேவை என்று உள்ள பிரிவின் கீழ், உதாரணத்திற்கு பசுமை வழிச்சாலை திட்டம் போன்றவற்றிற்கு எதிராக லோக் ஆயுக்தா விசாரிக்குமா?

லோக் ஆயுக்தா என்றாலே ரெண்டு முக்கிய அம்சங்கள். ஒன்று ஊழல் ஒழிப்பு, இரண்டு மக்கள் சேவையில் உள்ள குறைபாடுகள். நுகர்வோர் சட்டம் போன்றது. அதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறு, போலீஸ் அத்துமீறல், முறையாக நடைமுறையில் சட்டப்படி செய்யாதது குறித்து நோட்டீஸ் அனுப்பி கேட்கலாம்.

மனித உரிமை ஆணையம் எப்படி பாதிக்கப்பட்டால் கேள்வி எழுப்புகிறதோ? அதே போன்று பொதுமக்கள் சேவை குறைபாடு உள்ளது, ஏன் முறையாக செயல்படவில்லை, முறையாக செயல்படுங்கள் என்று கேட்கலாம். அரசுக்கான அதிகாரபூர்வ கன்ஸ்யூமர் கோர்ட் போன்று வைத்துக் கொள்ளலாம்.

லோக் ஆயுக்தா நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் போக வாய்ப்புள்ளதா?

லோக் ஆயுக்தா அமைப்பு ஊழல் விவகாரத்தில் தண்டிக்கவோ, தீர்ப்போ வழங்க முடியாது. அவர்கள் ஊழலைக் கண்டுபிடித்தால் ஆதாரங்களை திரட்டி தனி நீதிமன்றத்தில் சமர்பிப்பார்கள். இதில் என்ன தேவை என்றால் லோக்பால் வழக்குகளுக்காக சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு உருவாக்க வேண்டும்.

சேவை பெறும் உரிமை சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தாவில் மக்களின் உரிமை என்ன?

ஓவ்வொரு துறைக்கும் அதற்கான மக்களுக்கு சேவை அளிக்கும் நடைமுறைகள் உள்ளன. அதை மக்கள் சாசனம் என்பார்கள். உதாரணத்திற்கு மின்சாரம் கேட்டு விண்ணப்பித்தால் எவ்வளவு நாட்களுக்குள் கிடைக்கும் என்பதை உருவாக்கி வைத்திருப்பார்கள். மக்கள் சாசனத்தில் 30 நாட்களில் கொடுப்பேன் என்றுதான் உள்ளதே தவிர கொடுக்காவிட்டால் என்ன தண்டனை என்று இல்லை.

அப்படி ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும். அப்படி ஒரு நடைமுறை கேரளாவில் உள்ளது. குறித்த காலத்தில் சேவையை வழங்காத அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கலாம். இதன் மூலம் வேலை நடக்கும். இந்தச் சட்டம் அவசியம். இப்படி கொண்டு வந்தால் லோக் ஆயுக்தாவுக்கும் வசதியாக இருக்கும்.

லோக் ஆயுக்தா குறித்த மக்களின் எதிர்பார்ப்பு எப்படி உள்ளது என்று நினைக்கிறீர்கள்?

மக்களிடம் லஞ்சம் ஊழல் ஒழிய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால், ஆட்சியாளர்கள் போக்கைத் தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், அதனால் எதிர்பார்ப்பு உள்ள அளவு நம்பிக்கை இல்லை. இதற்கு உதாரணம் சரியாக சொல்ல வேண்டும் என்றால் லோக் ஆயுக்தாவில் கடுமையான சட்டப்பிரிவுகள் உள்ள மாநிலம் என்றால் அது சந்தோஷ் ஹெக்டே இருந்தபோது கர்நாடகாவில் தான் இருந்தது.

ஆனால் கர்நாடக மாநில அரசு 2014-ல் ஒரு முடிவெடுக்கிறது. அது என்னவென்றால் மக்களுக்கான சேவைகளை விசாரிப்பது லோக் ஆயுக்தாவில் இருக்காது. இனி தனியாக ஒரு அமைப்பு பார்த்துக்கொள்ளும் என்று முடிவெடுத்தார்கள். அப்போது எங்களைப்போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்த்தவுடன் பின் வாங்கினார்கள்.

ஆனால் 2016-ம் ஆண்டில் ‘ஆன்டி கரெப்ஷன் பீரோ’ என்ற அமைப்பை உருவாக்கி இனி இந்த அமைப்பு லஞ்ச ஊழல் பிரச்சினைகளை பார்த்துக்கொள்ளும் என்று சட்டம் இயற்றினார்கள். அது நமது மாநிலத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள அமைப்பு ஆகும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தோஷ் ஹெக்டே “கர்நாடகாவில் லோக் ஆயுக்தா மரணப்படுக்கையில் உள்ளது” என்றார். கர்நாடக மாநில லோக் ஆயுக்தா தலைவர் ”நாங்கள் இனி லஞ்ச, ஊழல் புகார் வந்தால் அதை ‘ஆன்டி கரெப்ஷம் பீரோவுக்கு’ அனுப்பிவிட்டு சும்மா இருந்துவிடுவோம், ஏனென்றால் எங்கள் அதிகாரம் குறைக்கப்பட்டுவிட்டது” என்று கூறியுள்ளார்.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் சட்டம் இருக்கிறது, ஆனால் ஆட்சியாளர்கள் அதை நீர்த்துப்போகச்செய்யும் வகையில் இணையாக வேறொரு அமைப்பை உருவாக்கி லோக் ஆயுக்தாவை பலமிழக்கச் செய்துவிட்டார்கள்.

இதுபோன்று மாநிலத்துக்கு மாநிலம் இஷ்டத்துக்கு லோக் ஆயுக்தாவை நீர்த்துப் போகச்செய்ய சட்டம் இயற்றுவதை விட மத்திய அரசே இந்தியாவுக்கான பொதுவான ஒரு லோக் ஆயுக்தா சட்டத்தை உருவாக்கலாமே?

நீங்கள் சொல்வது சரிதான். மாநில அரசின் உரிமை என்று ஒன்று உள்ளது. ஆனால், அடிப்படையில் இந்த மாதிரி அம்சங்கள் இருக்கவேண்டும் என்று கூறலாம். ஆனால் அப்படிச் செய்தால், மாநில அரசு நீங்கள் எங்களுக்கு புத்தி சொல்வதற்கு முன் நீங்கள் லோக் ஆயுக்தாவை முதலில் நிறைவேற்றுங்கள் என்று கூறிவிடும்.

லோக் ஆயுக்தாவை நீர்த்துப்போகச்செய்யாமல் இந்த விஷயங்களில் மாநில அரசு முடிவு செய்ய முடியாது என்று கொண்டுவரலாம் அல்லவா?

கொண்டு வரலாம். லோக் ஆயுக்தாவைக் காப்பாற்ற சில சட்டங்களை மாநில அரசு தன் இஷ்டத்துக்கு மாற்றக்கூடாது என்று நிர்ணயிக்கவேண்டும்.

லோக் ஆயுக்தாவில் கைவைத்து ஒழுங்குமுறைக்கு கொண்டுவர மத்திய அரசு நினைத்தால் முதலில் லோக்பால் அமைப்பைச் சரிசெய்யும் நிலைக்கு ஆளாக நேரிடும் என்பதால் மத்திய அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை.

வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் இப்போது லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவருவது கூட நீதிமன்ற நெருக்கடியால்தான். இல்லாவிட்டால் மாநில அரசுகள் இதை நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்.

இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் லோக் ஆயுக்தா உள்ளது?

சமீபத்திய நீதிமன்ற கணக்கின்படி 11 மாநிலங்கள் தவிர அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. இந்தியாவில் சிறந்த லோக் ஆயுக்தா அமைப்பு கர்நாடகாவில் பலமாக இருந்தது. இப்போது இல்லை. பல மாநிலங்களில் பெயரளவில் உள்ளது. மேலே குறிப்பிட்டப்படி நீர்த்துப்போகச்செய்து ஒன்றுமில்லாத அமைப்பாகத்தான் உள்ளது.

லோக் ஆயுக்தாவில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்ற சந்தேகம் சாதாரண பொதுமக்களுக்கு  உள்ளதே?

லோக் ஆயுக்தாவில் யார் தலைவராக இருப்பது, யார் தலைவரை நியமிப்பது என்று முடிவு செய்வார்கள். யார் தேர்ந்தெடுப்பது என்ற வரையறை கொடுத்துவிடுவார்கள்.

என்னென்ன விஷயங்கள் விசாரிக்கலாம், என்ன அதிகாரங்கள் உண்டு என்று முடிவெடுப்பார்கள். அதன் பின்னர் சூமோட்டோ வழக்கு எடுப்பது, சர்ச் வாரண்ட் போடுவது, லோக் ஆயுக்தா போலீஸ் நியமிப்பது, லோக் ஆயுக்தா தலைவரே சரியில்லாமல் போனால் எப்படி அவரை மாற்றுவது, கர்நாடகாவில் இருந்த சட்டப்பிரிவு 13, எப்படி திரட்டும் தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்வது, பொது வாழ்வில் செயல்படும் தலைவர்கள், ஊழியர்கள் தங்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடும் அதிகாரம், புகார்களின் மீதான நடவடிக்கையை எப்படி விசாரிப்பார்கள், அதற்கு என்ன ஆணை வழங்குவார்கள், அதைச் செயல்படுத்தாதவர்கள் மீது இவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பது பற்றியும் அதில் இருக்கும். முக்கியமாக யார் யாரை விசாரிக்கும் அதிகாரம் உள்ளது என்பதையும் தீர்மானிப்பார்கள். நான் முன்பே சொன்னது போல் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், அமைச்சர்களை விசாரிக்ககூடாது என்பது போன்ற விதிவிலக்குகள் கொண்டுவந்தால் லோக் ஆயுக்தா ஒன்றுமில்லாமல் போய்விடும்.

இதைத் தடுக்க என்ன செய்யவேண்டும்?

அதற்காகத்தான் நாங்கள் முன் கூட்டியே இதுபற்றி விவாதியுங்கள், என்னென்ன நடைமுறை என்பதை வெளிப்படையாக அறிவியுங்கள் என்கிறோம். ஆனால் தமிழக அரசு நேரடியாக ஒரே நாளில் விவாதமில்லாமல் சட்டத்தை இயற்ற முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இது சரியான நடைமுறை அல்ல.

இவ்வாறு செந்தில் ஆறுமுகம் தெரிவித்தார்.