லாலு பிரசாத்தின் மகன்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர்: ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு

0
0

ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியு) பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளது.

பிஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு காப்பகத்தில் இருந்த சிறுமிகள் 15 பேர், பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சனையில், பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என பிஹார் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, டெல்லியின் ஜந்தர் மந்தரில் தேஜஸ்வி யாதவ் நேற்று போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிஹாரில் ஆளும் ஜேடியு கட்சி, லாலுவின் மகன்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து, பிஹார் மேலவை உறுப்பினரும் ஜேடியுவின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் சிங் கூறியதாவது:

பிஹாரில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து முதல்வர் நிதீஷ் குமாரை பதவி விலகுமாறு தேஜஸ்வி யாதவும், தேஜ் பிரதாப்பும் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு முன்பாக, அவர்கள் இருவரும் டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி என்ன நடந்தது என்பதை நினைவுகூர வேண்டும்.

அப்போது இளம் வயதினரான இருவரும், டெல்லியில் மெஹரோலி பண்ணை வீடு, கன்னாட் பிளேஸ் மற்றும் அசோகா ஓட்டல் ஆகிய இடங்களில் பெண்களை கேலி கிண்டல் செய்தனர். இதன் காரணமாக, அவர்கள் இருவரையும் டெல்லிவாசிகள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த சம்பவத்தை அவர்கள் நினைவுகூர்வதுடன், அதனை பிஹார் மக்களிடம் ஒப்புக் கொள்ளவும் வேண்டும்.

இதேபோல், தேஜஸ்வி யாதவின் தனி உதவியாளர் மணி யாதவ் மீது பாட்னாவின் காந்தி மைதானம் காவல் நிலையத்தில் கடந்த 2011-ல் பாலியல் புகார் பதிவாகி உள்ளது. இதுதவிர, பலாத்கார வழக்கில் சிக்கிய ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் எம்எல்ஏ ராஜ் வல்லப் யாதவ், தற்போது லாலுவின் அரசியல் ஆலோசகராக உள்ளார். முதலில், இவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கக் கோரி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் லாலுவிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு சஞ்சய்சிங் தெரிவித்துள்ளார்.