ரேஷன் கடை ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேறறுக்: வாசன்

0
0

ரேஷன் கடை ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும், உணவுப் பொருட்கள் தடையில்லாமல் பொதுமக்களுக்கு கிடைக்கவும் உரிய தொடர் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் செய்கின்றனர். இவர்கள் ஏற்கெனவே தங்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசுக்கு கோரிக்கையாக முன்வைத்தும், வேலை நிறுத்தம் மூலம் வலியுறுத்தியும் இன்னும் அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. இது ஆளும் ஆட்சியாளர்களுக்கு உகந்ததல்ல.

குறிப்பாக ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கான ஊதியத்தை மாதந்தோறும் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன் வைக்கின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை இன்னும் அரசு நிறைவேற்றாத நிலையில் இன்று ரேஷன் கடைகள் இயக்கப்படாது என அறிவித்துள்ளனர். இதற்கு காரணம் தமிழக அரசு தான்.

அப்படி ரேஷன் கடைகள் இயக்கப்படாமல் இருப்பதால் பெருமளவு பாதிக்கப்படுவது ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே நம்பி இருக்கின்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் தான். ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நாட்களிலேயே அனைத்து பொருட்களும் ஒரே நேரத்தில் கிடைப்பதில்லை. அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கே அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் ரேஷன் கடைகளுக்கு உரிய பொருட்கள் முழுமையாக, உரிய நேரத்தில் வந்து சேர்க்கப்படுவதில்லை.

முக்கியமாக ரேஷன் கடைகள் என்பது உரிய நாட்களில், உரிய நேரத்தில் திறந்திருக்க வேண்டும். மேலும் ரேஷன் கடைக்கு வரும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அந்த மாதத்திற்கு உண்டான பொருட்கள் தடையில்லாமல், அலைக்கழிக்கப்படாமல் கிடைத்திட வேண்டும். அதாவது உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி பொதுவிநியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

எனவே தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், ரேஷன் கடைகள் திறந்திருக்க வேண்டிய நாட்களில் பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கவும், பொருட்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும், ரேஷன் பொருட்கள் கடத்தப்படாமல் இருப்பதற்கும், ரேஷன் கடைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.