ரூ.5 கோடியில் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம்: தமிழகத்திலே முதல் முறையாக மதுரையில் அமைகிறது

0
0

 தமிழகத்திலே முதல்முறையாக ரூ.5 கோடியில் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம் மதுரையில் 10 ஹேக்டேரில் அமைகிறது.இதற்காக முதற்கட்டமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டநிலையில் அதற்கான இடம் பார்க்கும் பணிகள் நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் (மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை) காணப்படும் மண் வளம், காலநிலையில் உற்பத்தியாகும் பாரம்பரிய மலர்களுக்கு சந்தைகளில் நிரந்தர வரவேற்பு இருக்கிறது. இதில், மதுரை மல்லிப்பூக்களில் காணப்படும் நிறமும், அதன் மணமும் வேறு எங்கும் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களில் இருக்காது.

அதனால், புவி சார் குறியீடு பெற்ற மதுரை மல்லிப்பூக்களுக்கு சர்வதேச மலர் சந்தையில் மவுசு அதிகம். சிங்கப்பூர், துபாய், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள சென்ட் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு தென் மாவட்டங்களில் இருந்து மல்லிப்பூ அதிகளவு ஏற்றுமதியாகிறது.

இதுதவிர செவ்வந்தி, ரோஜா, சம்பங்கி, கனகம்பரம், செண்டு மல்லி, வாடா மல்லி உள்ளிட்ட பாரம்பரிய மலர்களும் தென் மாவட்டங்களில் அதிகளவு உற்பத்தியாகிறது. அதனால், இந்த பாரம்பரிய மலர்களை அழியாமல் பாதுகாக்கவும், புதிய தொழில்நுட்பத்தில் சாகுபடியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் தமிழகத்திலே முதல்முறையாக மதுரையில் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம் அமைக்கப்பட உள்ளது. ரூ.5 கோடியில் 10 ஹேக்டேரில் இந்த மையம் அமைகிறது.

இதுகுறித்து மதுரை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறுகையில், “பாரம்பரிய மலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த மகத்துவ மையம் அமைக்கப்படுகிறது. தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை இந்த பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தை அமைக்கிறது. முதற்கட்டமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் அமைப்பதற்கு விவசாயிகள், விவசாய கல்லூரி மாணவர்கள், வேளாண் விஞ்ஞானிகள் எளிதாக வந்து செல்வதற்கான சாலை வசதி, மலர்கள் சாகுபடிக்கான தண்ணீர் வசதியுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். இடம் முடிவானவுடன் அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தி விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

 

 

ஆரம்பத்தில் இந்த மையம் மல்லிகை மகத்துவ மையம் என்ற பெயரிலே அமைய இருந்தது. அது அந்த ஒரு மலரின் உற்பத்தியை மையமாக கொண்டே செயல்படும் என்பதால் மற்ற பாரம்பரிய மலர்களையும் இந்த மையத்தில் சேர்த்து பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையமாக மாற்றி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதனால் மல்லிகையுடன், செவ்வந்தி, ரோஜா, சம்பங்கி, கனகம்பரம், செண்டு மல்லி, வாடா மல்லி உள்ளிட்ட பராம்பரிய மலர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மலர்கள், சாகுபடி முறைகள், நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்களை இந்த மையத்தில் காட்சிப்படுத்துவோம். அவற்றை இந்த மையத்தில் சாகுபடி செய்து, அதை விவசாயிகள் பார்த்து தெரிந்து கொள்வதற்கான பயிற்சி மையமாகவும் செயல்படும்.

மலர்களுடைய உற்பத்தி மட்டுமில்லாது அதை பதம்படுத்தும் வழிமுறைகள், செண்ட் தயாரிப்பு, வெளிநாடு ஏற்றுமதி, பேக்கிங் போன்றவையும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த மையத்தில் மலர்கள் சம்பந்தமான அனைத்து தகவல்களும் இடம்பெறும். வேளாண் மாணவர்களுடைய படிப்பிற்கும் இந்த மையம் மிகுந்த உதவியாக அமையும்” என்றார்.

 

 

வெளிநாடுகளுக்கு பறக்கும் தமிழக பாரம்பரிய மலர்கள்

தமிழகத்தில் 15 ஆயிரம் ஹேக்டேரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இதில், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூரில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. மதுரையில் அதிகபட்சமாக 2 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடியாகிறது. பசுமை குடில் ரோஜா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் சாகுபடியானாலும், மற்ற வகை ரோஜா மலர்கள் நல்ல மண் வளமுள்ள தென் மாவட்டங்களிலும் சாகுபடியாகிறது.

அதனால், மல்லிகையுடன் மற்ற பராம்பரிய மலர்களுடைய சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம் அமைக்கப்படுகிறது. தற்போது மதுரை விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக செயல்படத் தொடங்கியுள்ளது. துபாய், சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

விரைவில் மலேசியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. அதனால், எதிர்காலத்தில் மதுரை மல்லிகை உள்ளிட்ட மற்ற பாரம்பரிய மலர்களை விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்வதற்காகவும் இந்த மையம் வழிகாட்டும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.