ரூ.45 லட்சத்துக்கு என்ன செலவு செய்தீர்கள்?- ஆளுநரிடம் விளக்கம் கேட்டு ஒடிசா அரசு நோட்டீஸ்

0
0

ஓடிசா மாநில ஆளுநர் கணேஷ் லால் கடந்த மாதம் விமானத்தில் பயணம் மேற்கொண்டதில் ரூ.45 லட்சம் செலவு செய்யப்பட்டு இருப்பதற்குக் காரணம் கேட்டு மாநில அரசின் பொதுநிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஓடிசா மாநில ஆளுநராகக் கடந்த மே மாதம் கணேஷ் லால் நியமிக்கப்பட்டார். ஆளுநர் கணேஷ் லால் கடந்த மாதம் ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி டெல்லிக்குப் பயணித்தார், அங்கிருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை எடுத்து, உபியில் உள்ள தனது சொந்த ஊரான சிர்ஸாவுக்குச் சென்றார். இதில் ஜெட்விமானத்தை பயன்படுத்திய வகையில், ரூ41.18 லட்சமும், ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்ததில் ரூ.5 லட்சமும் செலவாகியது.

இந்நிலையில், ஆளுநர் கணேஷ் லாலின் இந்தச் செலவுகளுக்கு விளக்கம் கேட்டு முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில் பொது நிர்வாகத்துறை இரு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் ஜெட்விமானத்தையும், ஹெலிகாப்டரையும் என்ன காரணங்களுக்காக பயன்படுத்தினீர்கள், செலவு செய்யப்பட்டது உண்மைதானா என்று கேட்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில ஆளுநர் கணேஷ் லாலுக்கு பூங்கொத்து கொடுக்கும் முதல்வர் நவீன் ப ட்நாயக் : கோப்புப்படம்

 

இது குறித்து மாநில பொது நிர்வாகத்துறையின் துணை செயலாளர் இந்திரா பேஹ்ரா அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது

ஆளுநர் கணேஷ் லால் தனியார் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டரையும், ஜெட் விமானத்தையும் என்ன காரணங்களுக்காக, எந்தச் சூழலில் பயன்படுத்தினார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

2 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட மெஸ்ஸர்ஸ் பினாக்கல் ஏர் பிரைவேட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜெட் விமானத்தை ஜுன் 10-ம் தேதி வாடகைக்கு எடுத்து ஆளுநர் டெல்லிக்குச் சென்று, அங்கிருந்து 13-ம்தேதி புவனேஷ்வர்  வந்துள்ளார்

இதற்காக ரூ.41.18 லட்சம் வாடகை செலுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து ஜுன் 10-ம் தேதி சிர்ஸா நகருக்கு ஆளுநர் சென்றுள்ளார். இந்த வகையில் ரூ.5 லட்சம் செலவாகியுள்ளது.

இந்த செலவுக் கணக்கை அனுப்பி இருக்கிறோம். அதற்கான காரணங்களைத் தெரிவித்து, கையொப்பம் இட்டு , பயன்படுத்தியதற்கான சான்றிதழ் அளிக்கக் கோருகிறோம்‘‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒடிசா மாநில ஆளுநர் அலுவலக செய்தித்தொடர்பாளரிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், மாநில அரசு அனுப்பியுள்ள நோட்டீஸை ஏற்று, விமானம், ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கான சான்றிதழை அனுப்பிவைப்போம் எனத் தெரிவித்தார்.