ராஜஸ்தானில் சமையல் கேஸ் ஊழியர் சந்தேகத்தால் அடித்துக் கொலை: பவாரியா கிராமத்தில் கேஸ் ‘லீக்’ சரி செய்ய சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

0
0

ராஜஸ்தான் மாநிலத்தில் பவாரியா சமூக மக்கள் அதிகம் வசிக்கும் கிராம் ஒன்றில் சமையல் கேஸ் ‘லீக்’ ஆவதாக புகார் வந்ததை தொடர்ந்து, அதை சரி செய்ய சென்ற ஊழியரை, சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பல் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் போபல்கர் பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகஅளவில் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு அண்மையில் சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், லவேரா கலன் என்ற கிராமத்தில், வீடு ஒன்றில் சமையல் கேஸ் ‘லீக்’ ஆவதாக கேஸ் ஏஜென்சிக்கு தகவல் வந்தது. இதையடுத்து கேஸ் ஏஜென்சியைச் சேர்ந்த ஊழியர் ராம்பால் ஜாட் (வயது 30) என்பவர் அந்த பகுதிக்கு வந்துள்ளார்.

சரியான முகவரி தெரியாத நிலையில் ஒருவர் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அந்த வீட்டில் ஒரே ஒரு பெண் மட்டுமே இருந்துள்ளார். புதிய நபரை பார்த்து அவர் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை கையில் கிடைத்த கட்டை, கம்பு மற்றும் ஆயுதங்களுடன் விரைந்து வந்தனர்.

கேஸ் ஊழியரிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை சரமாரியாக தாக்கினர். அவரை பேசவிடாமல் இரும்பு, கட்டை போன்றவற்றால் மாறி மாறி கொடூரமாக தாக்கியதில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராம்பாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராம்பால் தந்தை அளித்த புகாரின் பேரில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில் ‘‘ராஜஸ்தானில் சட்டம் – ஒழுங்கு மிகவும் சீரழிந்துள்ளது. தனி மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பசுமாட்டை கடத்திச் செல்வதாக கூறி அப்பாவி இளைஞர் ஒருவரை அண்மையில் ஆல்வாரில் கும்பல் ஒன்று அடித்துக் கொன்றது. இந்த சம்பவத்தின் பீதி அடங்குவதற்கும் மீண்டும் அப்பாவி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’’ எனக் கூறினார்.

சமையல் கேஸ் ஏஜென்சி ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட கிராமம் பவாரியா பழங்குடியினர் அதிகஅளவில் வசிக்கும் பகுதியாகும்.. கொள்ளை, கொலை உள்ளி்ட்ட குற்றச்செயல்கள் செய்வதாக இந்த பகுதி மக்கள் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.